Hassan Nasrallah: `ஹிஸ்புல்லாவின் 32 ஆண்டுகால தலைவர் இறந்துவிட்டதாக அறிவித்த இஸ்ரேல்’ – யார் அவர்?

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நாளுக்கு நாள் மோசமடைந்துக்கொண்டே வருகிறது. தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளார். இதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.

1960-ம் ஆண்டு பிறந்த இவர், 1992-ம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். அதாவது கிட்டதட்ட 32 ஆண்டு காலமாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார் ஹசன் நஸ்ரல்லா. இவர் தலைமையில் ஹிஸ்புல்லா பல போராட்டங்களையும், தாக்குதல்களையும் முன்னெடுத்துள்ளது. 2000-ம் ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படையை அகற்றியது இவரது முக்கிய சாதனையாக பேசப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் காஸா தாக்குதல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த பாலஸ்தீனம் மிகுந்த பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு உதவ ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல், ஆயுதங்கள் அழிப்பு ஆகியவற்றில் ஈடுப்பட்டது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தது. அந்த தாக்குதல்களில் பேஜர், சோலார் தகடு, வாக்கி டாக்கி வெடிப்பு ஆகியவை அடக்கம்.

இதனால் உக்கிரம் அடைந்த ஹிஸ்புல்லா தங்களது தாக்குதல்களை இன்னும் வேகப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.

தற்போது இஸ்ரேல் நாடு தங்களது எக்ஸ் பக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் தொடங்கி தளபதிகள் வரை அனைவரையும் அழித்துவிட்டதாக பதிவு செய்துள்ளது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என வரப்போகும் நாள்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.