MUDA: “பதவி விலகத் தயார்; ஆனால்…” – பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்!

‘முடா’ முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது.

MUDA (Mysuru Urban Development Authority), அதாவது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.

சித்தராமையா

இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சித்தராமையா, “எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைச் சீர்குலைக்க முயல்கின்றன. ஜாமீனில் இருக்கும் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டாரா? நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு ராஜினாமா செய்தாரா? காங்கிரஸ் அரசை விமர்சிக்க பா.ஜ.க., தலைவர்களுக்குத் தகுதி இல்லை.

ஆபரேஷன் தாமரை மூலம் கர்நாடக அரசைச் சீர்குலைக்க பா.ஜ.க., முயன்றது. அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதனால் இப்போது பொய்யான குற்றச்சாட்டைப் பெரிதாக்குகிறார்கள். பா.ஜ.க.,வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஆளுநரும் எங்களுக்கு எதிராக எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், ஏழைகளுக்கு ஆதரவான உத்தரவாத திட்டங்களை நாங்கள் நிறுத்த மாட்டோம். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர்களுக்காக எங்கள் அரசு உள்ளது.

சித்தராமையா – மோடி

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்குப் பிரதமர் மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும். அவர்கள் விலகினால், நானும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார்” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.