திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (38). எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.
தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, ஜோசப் ஜெரோமை பிரிந்த அவரது மனைவி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாராம். மேலும், ஜோசப் ஜெரோமின் மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனைக் கேள்விப்பட்ட ஜோசப் ஜெரோம் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (26.09.24) ஜோசப் ஜெரோமின் திருமண நாள் வந்துள்ளது. ஏற்கெனவே மனைவிக்கு வேறு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிந்ததன்பேரில், மன உளைச்சலில் இருந்த ஜோசப் ஜெரோம் நேற்று அதிகாலை, அதாவது திருமண நாளன்று, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த ஜோசப் ஜெரோமின் பெற்றோர், மற்றும் அருகில் இருந்தவர்கள் கீழே பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ஜோசப் ஜெரோமை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோசப் ஜெரோம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வள்ளியூர் போலீஸார், ஜோசப் ஜெரோம் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவிக்கு மறுதிருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருமண நாளிலேயே ஜோசப் ஜெரோம் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.