VCK: “ஆளாளுக்கு கருத்து சொல்லக் கூடாது; அவசரப்பட்டிருந்தால்..!” – விளக்கும் திருமாவளவன்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் என்ற வி.சி.க-வின் முழக்கம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியபிறகு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துகள் பேசுபொருளானது. திருமாவளவன் சற்று அமைதியாக இருக்கவே, தி.மு.க கூட்டணியில் விரிசல் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டது.

திருமாவளவன், ஸ்டாலின்

பின்னர், கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை அதேசமயம், அதிகாரப்பகிர்வு என்ற இலக்கில் உறுதியாக இருப்பதாகவும் கூறி கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன். இந்த நிலையில், வி.சி.க-வை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றும், ஆளாளுக்கு கருத்து சொல்லக் கூடாது என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “வி.சி.க ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்தோடு நின்றால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. அது வெறும் சீட் பகிர்விலேயே நின்றுவிடும். ஆட்சியதிகாரத்துக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளின் நன்மதிப்புகளையும் பெறவேண்டும். மிகக் கவனமாக, தொலைநோக்குப் பார்வையோடு, நெடுங்காலம் நின்று தாக்குப்பிடிக்கக் கூடிய அளவிலான வலிமையோடு செயல்பட வேண்டும். இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்த இயக்கம் வீரியத்தோடு செயல்படும் என்ற அளவுக்குப் பொறுமையும், சகிப்புத்தன்மையும், கொள்கைப் பிடிப்பும் தேவை.

திருமாவளவன்

எதிரிகள் எவ்வளவு வேண்டுமானால் கத்தட்டும். அவர்களின் யூகங்கள் மற்றும் கற்பனைகளைப் பொறுமையாக இருந்து பார்க்கலாம் என்றுதான் இரண்டு நாள்களாக அமைதியாக இருந்தேன். அவசரப்பட்டிருந்தால் 10 வருடங்களுக்கு முன்பே நம்மை ஓரங்கட்டியிருப்பார்கள். கவனமாகச் செயல்பட வேண்டும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். நாம் அதைத் தேடிப்போக வேண்டாம். ஆளாளுக்கு கருத்து சொல்லக் கூடாது. வாயைப் பிடுங்குவார்கள், ஒரு வார்த்தையை வைத்து ஒரு மாதம் அரசியல் செய்வார்கள்.

ஆதவ் அர்ஜுன் ஒரு கருத்து சொல்ல, பொதுச் செயலாளர்கள் ஒரு கருத்து சொல்ல கட்சிக்குள் முரண்பாடு என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆதவ் அர்ஜுன் கட்சி நலன் சார்ந்து சிந்தித்தார். பொது செயலாளர்கள் கட்சி நலனும் முக்கியம், அதைவிடக் கூட்டணி நலன் முக்கியம் என்று சிந்தித்தனர். கூட்டணி உடைந்தால் அடுத்து என்ன என்கிற பெரிய கேள்விக்குறி இருக்கிறது. நாம் பாதுகாப்பான இடத்தில் நிற்காமல் எந்த யுத்தத்தையும் நடத்தக்கூடாது. நமக்கு எதிரில்தான் எதிரிகளை வைத்து யுத்தம் செய்யவேண்டும். எதிரிகள் நம்மைச் சுற்றிவளைக்க அனுமதிக்கக் கூடாது.

திருமாவளவன்

நம்மைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நான் அடித்துச் சொல்கிறேன், இன்றைக்கு கருத்தியல் அடிப்படையில் விவாதிக்கக் கூடிய தலைவர்களைக் கொண்ட இயக்கம் வி.சி.க. எங்கள் மீதான சாதிய முத்திரையைத் துடைத்தெறிய 30 ஆண்டுகளாக நிதானமாக அடியெடுத்து வைக்கிறோம். எனக்கு கட்சி நலன், கூட்டணி நலன், மக்கள் நலன் ஆகிய மூன்றும் முக்கியம். அவசரப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை. பேசவேண்டியவர்களிடம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். என்னுடன் இருப்பவர்கள் எத்தனைக் கருத்துகள் சொன்னாலும் என்னுடைய முடிவுக்கு, கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.