நெல்லை, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சிவன் பெருமாள். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமரசம் செய்து வைப்பதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த கலைச்செல்வி, கணவர் சிவன் பெருமாள் மீது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை கொதிக்க வைத்து கோபத்தில் ஊற்றியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த சிவன் பெருமாள், நெல்லை அரசு மருத்துவக் கல்லாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீக்காயம் அடைந்த சிவன் பெருமாள், பேச இயலாத நிலையில் இருந்ததால் தன் கணவர் தானே அடுப்பில் கொதிக்க வைத்திருந்த எண்ணெய்யை அவரது தலையில் ஊற்றிக் கொண்டார் என, கலைச்செல்வி போலீஸாரிடம் கூறி நாடகமாடியுள்ளார். இந்த நிலையில், சிவன் பெருமாளின் தாய் பேச்சியம்மாள், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ”என் மகன் சிவன் பெருமாளுக்கும் மருமகள் கலைச்செல்விக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கலைச்செல்விதான் என் மகன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீதுதான் எனக்கு சந்தேகம் உள்ளது” எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த சிவன் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தாய் பேச்சியம்மாளின் புகாரின் அடிப்படையில் கலைச்செல்வியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிவன் பெருமாள் வசித்து வந்த பகுதியில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையிலும் எண்ணெய்யை ஊற்றியது கலைச்செல்விதான் எனத் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், விசாரணையில் கலைச்செல்வியும் தான்தான் கணவர் மீது எண்ணெய்யை கொதிக்க வைத்து ஊற்றியதையும் ஒப்புக் கொண்டார். குடும்பத் தகராறு என்ற போதிலும் மனைவியே கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.