சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட மதினா பள்ளி வாசல் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி போலீஸார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் பைக்கை ஓட்டி வந்தவர் நிற்காமல் தப்பிச் சென்றார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது அந்த நபரின் பெயர் அகமது என்று தெரிந்தது. அவரின் கையில் ஒன்றரை அடி உயரமுள்ள முருகன் சிலை ஒரு அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை ஆகிய இருசிலைகளும் இருந்தது.
அந்தச் சிலைகள் குறித்து அகமதுவிடம் விசாரித்தபோது அவைகள் திருடப்பட்டவை எனத் தெரிந்தது. அகமது அளித்த தகவலின்படி ரெளடி ஆகாஷ், மூர்மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் பிரகாஷ் ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இந்த சிலைகளை திருடி கோடி கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல் துறையினரிடம் போலீஸார் காண்பித்து விசாரித்தனர்.
அப்போது சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் இவைகள் 150 ஆண்டுகளுக்கு மேலான புரதான சிலைகள் என்று தெரிவித்தனர். இதையடுத்து புரதான சிலைகளை விற்க முயன்ற குற்றத்துக்காக மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சிலை வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.