`பித்தளையில் தங்க முலாம் பூசியதுபோல உள்ளது..’ – தங்கம் தென்னரசின் அறிக்கை குறித்து ஆர்.பி.உதயகுமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த கோரியும் தி.மு.க அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த, ஜெயலலிதா பேரவை சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியைப் பெற மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மனு அளித்தார்.

ஆர்.பி.உதயகுமார்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து போராடி வருகிறார், இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க அம்மா பேரவையை போராட்ட களத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில், விரைவில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவிக்க உள்ளார். இதற்கான முன் அனுமதியை பெற வேண்டி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தேர்தல் அறிக்கை எண் 185-ல் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், ஐந்தாண்டில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்குவோம் என்று கூறினார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் சிறு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை.

அதேபோல் ஐந்தரை லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். இதுவரை 6000 வரை நியமிக்கப்பட்டதாக அரசு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

அதேபோல் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள், அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இன்றைக்கு அவர்களின் வாரிசுகளுக்கு முன்னேற்றத்தை கொடுத்துவிட்டு தமிழக இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

ஆர்.பி.உதயகுமார்

கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில் 52 லட்சம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினோம், ஆனால் இன்றைக்கு மடிக்கணினி திட்டம் முடக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடியார் கேள்வி எழுப்பியும் பதில் இல்லை, அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது.

அதேபோல் பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் படித்த பெண்களுக்கு ரூ.25,000, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ 50,000 மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கத்தை அம்மா அரசு வழங்கியது. அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த இத்திட்டம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில்கூட கிடையாது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர், இளைஞர்களின் எதிர்காலம் போதைப்பொருளால் சீரழிந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் இது குறித்து ஆதாரத்துடன் எடப்பாடியார் எடுத்துச் சென்றபோது முதலமைச்சர் மறுத்தார். ஆனால், தற்போது மது, போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க  போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே குழு அமைத்து தடுப்போம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  முதலமைச்சர் வெளிநாடு சென்றது தோல்விதான். அது குறித்து எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார், கொடுக்க மறுக்கிறார்கள். தற்பொழுது தொழில்துறை அமைச்சர் கூறிய அறிக்கையை வெள்ளை அறிக்கை என்று முதலமைச்சர் கூறுகிறார். நாங்கள் தங்கத்தை கேட்கிறோம், அவர்களோ பித்தளையில் தங்க முலாம் பூசியது போல கூறுகிறார்கள்” என்றார்.