Nitin Gadkari: `எனக்குப் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை வந்தது, ஆனால்…’ – மனம் திறந்த நிதின் கட்கரி

2014-ல் பிரதமர் வேட்பாளராக மோடியின் பெயர் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் நிதின் கட்கரியின் பெயர் பிரதமர் வேட்பாளராக விவாதிக்கப்பட்டதாகப் பேசப்பட்டது. இந்தியா டுடே நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய, தேசத்தின் மனநிலை என்ற தலைப்பிலான கருத்துக்கணிப்பில், மோடிக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு மிகவும் பொருத்தமான மூன்றாவது தலைவராக, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை விட நிதின் கட்கரி எதிர்பார்க்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிதின் கட்கரி

இந்த நிலையில், நேற்று தனியார் பத்திரிகை நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், அதற்குப் பிறகும் எனக்கு பலமுறை பிரதமராகும் வாய்ப்பு வந்தது. பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ஆதரிப்பதாகக்கூட தெரிவித்தார். ஆனால், எனக்குப் பிரதமர் கனவெல்லாம் கிடையாது. எனது சித்தாந்தத்துடன் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இந்த வாய்ப்பை ஏற்கும் எண்ணமே இல்லை. பிரதமராவது எனது நோக்கமல்ல. எனது சித்தாந்தத்ததுடன், நம்பிக்கையுடன் வாழ்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.