“தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றரா? மகனை துணை முதல்வராக்க ஆசிவாங்க சென்றாரா?” – ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை கூட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கட்சி வளர்ச்சி பணி குறித்தும், மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி நான்கு மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி அதை மினிட் புக்கில் கையெழுத்து பெற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் 82 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, உறுப்பினர் உரிமை அட்டை அனைவருக்கும் சேர்ந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து, உங்களுக்கு வாழ்த்து கடிதத்தை எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்.

அதிமுக தொண்டர்களை எதிரிகள் சாதாரணமாக எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள், தேர்தல் காலங்களில் அவர்களுக்கு புரியும்.

திருமங்கலத்தில் அருகிலுள்ள சிவரக்கோட்டை விவசாய பூமியில் தொழிற்பேட்டை அமைக்க திமுக முயற்சித்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள், அதை நான் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு சென்றதும் அதற்கு தீர்வு கண்டார். அதேபோல் இப்பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றவும், தொழிற்சாலையிலிருந்து மாசு வருவதை கண்டித்தும், கப்பலூர் டோல்கேட்டை எதிர்த்தும் போராடினோம். இதுபோன்று மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

ஸ்டாலின் – மோடி

ஆட்சியில் இருந்தபோது எப்படி மக்களுக்கு சேவை செய்தோமோ, அதுபோல் இப்போதும் மக்கள் உரிமைக்காக நெஞ்சுரத்துடன் போராடி வருகிறோம். இதற்காக சிறையில் தள்ளினாலும் நாங்கள் பின்வாங்க போவதில்லை.

இன்றைக்கு முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைப் பிரச்னைகளை கேட்க நாதி இல்லை. 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்விக்கு நிதி, மெட்ரோ நிதி போன்றவற்றை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர அரசுக்கு யோக்கியதை இல்லை, அதே போல் மீனவர் பிரச்னையை தீர்க்க முதலமைச்சருக்கு திராணி இல்லை.

பிரதமரை சந்தித்து தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகள் குறித்தும், பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் பேசினாரா? இல்லை, தன் மகனை துணை முதலமைச்சராக்க ஆசி வாங்கினாரா?ஆண்டவனுக்குத்தான் தான் வெளிச்சம். மக்கள் பிரச்னைகள் தீர ஒரே வழி 2026-ல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி மலர வேண்டும்” என்றார்.