மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியும் தனித்தனியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. மத்திய அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்தார். அவர் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சாம்பாஜி நகரில் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆனாலும் இன்னும் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை. சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.
அதேசமயம் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க-வில் தொடர்ந்து வைத்திருக்க பா.ஜ.க தலைவர்களில் குறிப்பிட்ட பிரிவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே இவ்விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டது. எனவே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை கொடுக்க பா.ஜ.க தயக்க காட்டி வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வளர்த்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க ஆர்வமாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் அஜித்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் அவரது மனைவி உட்பட 3 பேர் தோல்வியை தழுவினர். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த காரணத்தால் அவர் மீது இருந்த அதிருப்தியில் மக்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ததாக கூறப்படுகிறது. இத்தேர்தல் முடிவு குறித்து மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்தது ஆரம்பத்தில் பா.ஜ.க வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்போது 80 சதவீத வாக்காளர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். சில நேரங்களில் அரசியலில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாங்களும் அது போன்ற ஒரு சமரசத்தைத்தான் செய்து கொண்டோம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மோசமான தோல்வியை சந்தித்தது உண்மைதான். எங்களது கூட்டணி கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு புதிது. அவர்களுக்கு இத்தேர்தல் தங்களது வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு சோதனையாக அமைந்தது. சிவசேனா எங்களுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்ததால் அக்கட்சி வாக்காளர்கள் அப்படியே தேர்தலில் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எப்போதும் பா.ஜ.க போட்டியிட்டு இருந்ததால் தேசியவாத காங்கிரஸ் வாக்காளர்கள் அப்படியே பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை.
அதனால்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனால் இரு கட்சிகளும் இப்போது வாக்காளர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். எனவே சட்டமன்ற தேர்தலில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பிரச்னை ஏற்படாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தேவை என்பதை பா.ஜ.க வாக்காளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொகுதி பங்கீடு விவகாரத்தில் 80 சதவீத தொகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது” என்றார்.