சென்னை எக்மோரிலுள்ள லலித் கலா அகாடெமியில் மீனவ மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் ‘கடலின் கதைகள்’ புகைப்பட கண்காட்சி.
புகைப்பட கண்காட்சி என்றாலே பொதுவாக கொண்டாட்டத்தைப் பற்றி அல்லது காடு, மலை என அழகியல் பற்றியதாகவே இருக்கும். மீனவர் மக்களைப் பற்றிய புகைப்பட கண்காட்சி என்றதும் ஆர்வம் பற்றிக்கொள்ள, என்ன இருக்கிறதென்று பார்க்க கேலரிக்குள் சென்றோம். மீன் பிடிக்க படகுகளைக் கடலில் தள்ளும் மீனவர்கள், பிடித்த மீன்களை ஏலம் விடும் மீனவர்கள், அதனை வாங்கி வீடுகளுக்கு விற்கச் செல்லும் மீனவப் பெண்கள் ஆகியோரின் புகைப்படங்கள் அலையைப் போல வந்து நம்மையும் அந்த கடற்கரைக்கே இழுத்துச் சென்றன.
வார இறுதியில் மீன், இறால், நண்டு வாங்கும்போது மட்டும்தான் மீனவர்கள் நம் நினைவுக்கு வருகின்றனர். வாங்கி சாப்பிட்ட மறுகணத்திலேயே அவர்களின் நினைவுகளும் காற்றாகக் கரைந்துவிடுகின்றன. மீனவர்களின் பிரச்னைகள், குண்டடிபட்ட மீனவரின் கதைகள் பற்றியெல்லாம் நாம் கவனிப்பதில்லை. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் செய்திகளெல்லாம் அன்றாடம் வரும் இயல்பான செய்திகளாகிவிட்டன. மீனவர்களின் வாழ்வியல் பற்றி நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்க மறுக்கும் கதைகளைத்தான் இந்தப் புகைப்பட கண்காட்சியில் இருக்கும் புகைப்படங்கள் நம்மிடம் உரையடுகின்றன.
கேலரிக்குள் நுழைந்தபோது, ‘நீங்கள் இங்க பார்க்கப் போகும் அனைத்து கதைகளுமே உங்களை ஒரு புது உலகத்துக்கு அழைத்துச் செல்லும். அந்த உலகம் மீன் விற்கும் பாத்திரங்களைச் சுமக்கும் மீனவப் பெண்களின் கதைகளையும், மீன் மார்கெட்டின் கதைகளையும், கருவாடுகளின் கதைகளையும், குண்டடிப்பட்ட மீனவரின் கதைகளையும், மண்ணரிப்பில் அழியும் ஊரின் கதைகளையும் உள்ளடக்கியது’ என இப்படி ஒரு செய்தி ஒட்டப்பட்டிருந்தது.
சுற்றிப் பார்த்தபோது சுவரெங்கிலும் நெய்தல் மக்களே இருந்தனர். கிளிஞ்சல் எடுத்துச் செல்லும் பழங்குடியின மூதாட்டி, இறாலின் மீசையைப் பிடித்து விளையாடும் சிறார்கள், சூரிய ஒளியில் தங்கமாக மின்னியபடி குளத்தில் இறங்கி மீன் பிடிக்கும் வயதானவர்கள், மீன் கூடையுடன் பஸ் ஏறும் பாட்டி என மீனவர்களின் வாழ்வியலை நம் கண்முன்னே காண்பித்தது இந்தக் கண்காட்சி.
இந்தப் புகைப்பட கண்காட்சியின் சிறப்பிற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 400 புகைப்படங்களையும் மீனவப் பெண்களே கேமராவில் எடுத்திருக்கின்றனர். இரண்டாவது, நெய்தல் நிலத்து மக்களின் அழகியலையும் வாழ்வியலையும் புகைப்படமாக மொழிபெயர்த்திருப்பது.
ஒரு பக்கம் அவர்களின் கொண்டாட்டம், சிரிப்பு. மறுபக்கம் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து போன புகைப்படங்கள் இருந்தன. மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு கால்களை இழந்த மீனவர் ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எளிதில் அடுத்தப் படத்தின் மீது பார்வையை நகர்த்த முடியவில்லை.
வீடு இருக்கும் இடத்திலும் சரி, மீன் பிடிக்கச் செல்லும் இடத்திலும் சரி; எங்கும் அவர்களுக்குப் பிரச்னைதான் என்பதை இந்தப் புகைப்படங்களைப் பார்க்கையில் உணரமுடிந்தது. நாம் வாங்கும் மீனின் மேலுள்ள ரத்தம் மீனுடையது மட்டுமல்ல எனத் தெரிந்தபோது மனம் கனத்துப்போனது.
கேலரியிலுள்ள படங்கள் அனைத்தும் மீனவப் பெண்களால் படம் பிடிக்கப்பட்டது. நாகப்பட்டினத்திலுள்ள 8 பெண்களும் மற்றும் ஒரிசாவிலுள்ள 8 பெண்களும் இணைந்து மொத்தம் 16 பெண்கள் எடுத்தப் புகைப்படங்கள்தான் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீனவப் பெண்களிடம் கேமராவைக் கொடுத்து அவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை வைத்தே அவர்களின் வாழ்வியலை சொல்ல வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞர் பழனிக்குமார்.
மீன் விற்று சோர்வடைந்த பெண் ஒருவர் நிழலில் அமர்ந்திருந்திருந்த புகைப்படம், கதைகள் பேசிக்கொண்டு மீன் வலைகளைப் பின்னும் மீனவர்கள், குளத்தில் மூழ்கி இறால் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்ட பழங்குடியினப் பெண்கள் ஆகியோரின் புகைப்படங்களெல்லாம் நம் கவனத்தை ஈர்த்து, சொல்லப்படாதக் கதைகளை எல்லாம் நமக்குச் சொல்கின்றன.
‘கடலின் கதைகள்’ எனும் இந்த நிகழ்வை ‘தகஷின் பவுண்டேஷன்’ ஒருங்கிணைத்துள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா, செப்டம்பர் 23ஆம் தேதி ‘லலித் கலா அகாடெமி’யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்றப் புகைப்பட கலைஞர் தயாநிதா சிங், பத்திரிகையாளர் பிரமா ரேவதி, நாவலாசிரியர் நமிதா வைகர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
புகைப்பட கலை (போட்டோகிராஃபி) என்றாலே அழகு பற்றியதுதான் என பொதுச்சமூகம், உளவியலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கடலைப் பற்றி, அதிகாலை சூரியன் ஒளி பட்டு கடல் அலைகள் மின்னும் அழகைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் புகைப்படமெடுப்பவர்கள், அந்தக் கடற்கரை மக்களின் வாழ்வியலைப் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இப்படியானதொரு சமூக அமைப்பில், விளிம்பநிலை மண்ணின் மைந்தர்களின் வாழ்வையும், கொண்டாட்டத்தையும், வலியையும் கேமாரா மூலம் புகைப்படங்களாக மொழிபெயர்த்து வரும் புகைப்படக் கலைஞர் பழனிக்குமாரிடம் இந்தக் கண்காட்சி குறித்துப் பேசினோம், “இதுவரை நாம்ம பார்த்த கதையெல்லாம் வேறு ஒருத்தர் பார்வையில இருந்து சொல்லப்பட்டிருக்கும். ஆனா, இங்க அவங்க வாழ்வை அவங்களே புகைப்படங்களாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருக்காங்க.
இங்க இருக்க எல்லா போட்டோவையும் மீனவப் பெண்கள்தான் எடுத்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு இப்படி நடக்குறது இதுதான் முதல் முறை. அவங்களே அவங்கக் கதையை வெளிக்கொண்டு வரணும். இதுதான் இந்தக் கண்காட்சியோட நோக்கம்” என்றார்.
16 மீனவப் பெண்களுக்கும் கேமராவும், அதற்கான பயிற்சியும் வழங்கிய பழனிக்குமாரின் இந்த முயற்சி இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு கேமராவை வைத்து மீனவ மக்களின் வாழ்வையே ஆவணப்படுத்தி அவர்களின் வாழ்வியலை இந்தச் சமூகத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் அவர்.
அங்குள்ள ஒவ்வொரு புகைப்படங்களும் பல நூறு கதைகளைச் சொல்கின்றன. “புகைப்படம் என்ன சொல்ல வருகிறது, அதன் உள்ளடக்கம்தான் முக்கியம். அதற்கு முறையாக புகைப்படங்கள் எடுக்கத் தெரிந்திருக்க அவசியமில்லை” என ‘கலை கலைக்கானதல்ல, கலை மக்களுக்கானது’ என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் பழனிக்குமார்.
காடு, மலை, கடல் என இயற்கையின் எழில் கொஞ்சல்களை எடுக்க பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால், எளிய மக்களின் வாழ்வியலைப் படம்பிடிக்கும் கலைஞர்கள் நிறையபேர் உருவாக வேண்டும். கலையை கையில் எடுத்து நம் கதைகளை நாமே சொல்ல வேண்டும்.
இந்த புகைப்பட கண்காட்சி செப்டம்பர் 29 வரை காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. மீனவர்களின் வாழ்வியலையும், மீனவர்களே தங்கள் வாழ்வியலைப் புகைப்படமாக மொழிபெயர்த்திருப்பதையும் நீங்களும் வாய் ப்பிருந்தால் நேரம் ஒதுக்கிப் பார்த்து வரலாம்.
படங்கள் உதவி் : நூர்நிஷா. கா