`இனி ஆண்டுக்கு 6% சொத்துவரி உயர்வு; தனியாரும் மயானம் அமைக்கலாம்’ – பரபரத்த சென்னை மாநகராட்சி கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (27-09-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் லலிதா ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

* ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிய மாமன்றக் கூட்டம் கூட்டுவதற்கு ஏதுவாக, வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* மண்டலம் – 9, வார்டு 110-ல் உள்ள காம்தார் நகர் மெயின்ரோடு சாலைக்கு பிரபல பின்னணிப் பாடகரான `எஸ்.பி. பாலசுப்பிரமணியம்’ பெயர் சூட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

* சென்னை மாநகராட்சி பேருந்து வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லாத இடங்களில் `புதிய நவீன 3D மாடல் பேருந்து நிறுத்த நிழற்குடைகள்’ அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* அதேபோல, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை, கட்டட இடிபாடு கழிவுகளை விதிமீறி கொட்டுவோருக்கான அபராதத்தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பொது இடங்களில், கழிவுநீர் பாதைகளில், நீர்நிலைகளில் குப்பை கொட்டுதல், குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டுதல், வாகனங்களில் வந்து குப்பை கொட்டுதல், உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி

* சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே Private Public Partnership முறையில் 1 – Package ஆக மண்டலம் 5,6,9 (மெரினா) பொதுக் கழிப்பிடங்கள் தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 1,2,3,4,5,7,8,9,10,11,12,13,14,15 ஆகிய மற்ற அனைத்து மண்டலங்களிலும் இதை விரிவுபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக, Package 2 – 350.39 கோடியும், Package 3 – 443.69 கோடியும், Package 4 – 373.11 கோடியும் திட்ட பட்ஜெட்டாக மதிப்பிடப் பட்டிருக்கிறது.

* அம்மா உணவகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான தீர்மானங்கள்:

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை ஆண்டு தோறும் 6% அதிகரித்து வசூலிக்கும் தீர்மானம் இடம்பெற்றிருந்தது. “ஏற்கெனவே 2022-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட 100% சொத்துவரி உயர்வால் சென்னை மக்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்துவரி உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற முடிவால் பொதுமக்கள் மேலும் வரிச்சுமைக்கு ஆளாகி இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என பல கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது ஒன்றிய அரசின் நெருக்கடி என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி

அதைபோல, தனியார் மயான பூமிகளுக்கு உரிமக் கட்டணம் மற்றும் அனுமதி வழிமுறைகள் வழங்கும் தீர்மானமும் மாநகராட்சியால் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு வி.சி.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.‌ “மயானங்களை தனியார் தொடங்கி நடத்த அனுமதி அளித்தால் அது சாதிய மதவாத சக்திகள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வார்கள். அதற்கு துணைபோகக்கூடாது. அந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும். வாழும்போது தான் ஒன்றாக வாழவில்லை இறந்த பிறகாவது எல்லாரும் ஒரே இடத்தில் பாகுபாடின்றி அடக்கம் செய்யப்படட்டுமே.” என்றனர். ஆனால் இந்தத் தீர்மானமும் மேயரால் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல சொத்துவரி உயர்வு தொடர்பான தீர்மானத்தை அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்தனர்.

அடுக்கடுக்கான கேள்விகள்… காரசாரமான விவாதம்:

மாமன்றக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதி, மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, நிலைக்குழு(கல்வி) தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், “கலாஷேத்ரா வசமுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஓ.எஸ்.ஆர் நிலத்தை மீட்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யப்படாத (நீர்நிலையற்ற) நிலங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு வரிவசூல் செய்ய வேண்டும்.தற்காலிக மழலையர் பள்ளி ஆசிரியர்கள், ஆயாக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

மேயர் பிரியா

மேலும், “கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட வாடகை உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டடங்களை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்படாமல் காலியாக கிடக்கின்றன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் அவற்றை விரைந்து வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். இதே கருத்தை துணைமேயர் மகேஷ்குமாரும் வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய, நிலைக்குழு தலைவர் (கணக்கு மற்றும் தணிக்கை) தனசேகரன், “சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 5,6,9-களில் புதிய பொதுக் கழிப்பிடங்கள் கட்டவும், 9 ஆண்டுகள் பராமரிக்கவும் தனியார் நிறுவனத்துக்கு ரூ.430 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் உரிய காலத்துக்குள் சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பொதுக்கழிப்பிடங்களை கட்டிமுடிக்கவில்லை.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

இதை, ஜூனியர் விகடன் வார இதழிலும் ‘கட்டி முடிக்கப்படாமலிருப்பது, பராமரிப்பின்றி இருப்பது, கட்டணம் வசூலிப்பது’ உள்ளிட்ட பிரச்னைகளை பட்டியலிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். ஒரு கழிப்பிடத்தை மூன்று மாதத்தில் கட்டிவிடலாம். அப்படி கட்டமுடியவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஏதாவது தகுதிவாய்ந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை கொடுத்துவிடலாமே!” எனக் காட்டமாகப் பேசினார்.

இதையடுத்து மண்டலம்-15 வார்டு கமிட்டி தலைவர் மதியழகன் பேசும்போது, “கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைப்போல, மண்டலங்களில் வார்டுகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.10 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மேயர் பிரியா, “ரூ.5 லட்சம் என இரண்டு தவணைகளாக மொத்த தொகையும் கொடுக்கப்படும்” என்றார். அப்போது எழுந்த மற்ற கவுன்சிலர்கள், அந்த ரூ.5 லஞ்சமும் பலருக்கு வரவில்லை. கடந்த ஆண்டைப்போல ஒரே தடவையாக ரூ.10 லட்சத்தை வழங்க வேண்டும்” எனக்கோரி மாமன்றக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

தொடர்ந்து பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசினர்.

முன்னதாக, லிப்ஸ்டிக் சர்ச்சையில் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், “இதற்கு நான் மாமன்றக் கூட்டத்தின்போது லிப்ஸ்டிக் அணிந்து வந்து எனது எதிர்ப்பை பதிவு செய்வேன்” என்று சபதமிட்டிருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் அவர் லிப்ஸ்டிக் பூசாமல் கலந்து கொண்டார்.