திருப்பதி பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நாடு முழுவதும் விற்கப்படும் நெய்யின் தரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “திருப்பதி வெங்கடாசலபதி பிரசாதத்தில் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்பனர்களும், பக்தர்களும் விசாரணை நடத்தக் கோரி வருகின்றனர். இந்த நேரத்தில் நாட்டின் அனைத்து மடங்கள், கோயில்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தெய்வங்களுக்குத் தயாரிக்கப்படும் பிரசாதம் கோவில் பூசாரிகளின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட வேண்டும். அத்தகைய பிரசாதம் மட்டுமே தெய்வங்களுக்குப் படைக்க வேண்டும்.
பிரசாதத்தில் இறைச்சி மற்றும் கொழுப்பைக் கலந்து நாட்டின் மடங்கள் மற்றும் கோவில்களை அவமதிக்கச் சர்வதேச சதி நடக்கிறது. எனவே, அனைத்து முக்கிய கோவில்கள் மற்றும் மடங்களில் வெளி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரசாதத்திற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் நெய்யின் தூய்மை குறித்து அரசு கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியிருக்கிறார்.