‘இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது’- பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார்

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கைக் கோரி ஆந்திர டிஜிபிக்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி புகார் அளித்திருக்கிறார்.

திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பரிகாரம் தேடப்பட்டது. மேலும், இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

இந்த விவகாரம் தீவிரமடைந்து வந்த நிலையில், பிரபல யூடியூபர்கள் கோபி – சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். வீடியோ வெளியான சில மணி நேரத்தில் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனம் புண்படுவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், பரிதாபங்கள் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்கியிருக்கின்றனர்.

இது தொடர்பாக கோபி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியிருக்கிறோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கைக் கோரி ஆந்திர டிஜிபிக்கு பா.ஜ.க விளையாட்டு பிரிவு தலைவர் சேர்ந்த அமர்பிரசாத் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பா.ஜ.க.வை சார்ந்த அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த புகார் மனுவில், “வீடியோவை நீக்கினாலும் இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது. மேலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவை தனது ட்விட்டர் பக்கத்திலும் அமர்பிரசாத் பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா அனுமதியுடன் ஆந்திர டிஜிபிக்கு பா.ஜ.க சார்பில் புகார் அளித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88