அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். செந்தில் பாலாஜியின் வழக்கு கடந்து வந்த பாதையைப் பற்றிய முழுமையான விளக்கம் இங்கே.
2011 – அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியில் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆக்கினார்.
2014 – ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்தில் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சர்ச்சை கிளம்பியது.
2015 – ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்துக்காக லஞ்சமாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக செந்தில் பாலாஜி மீது தேவசகாயம் என்பவர் புகார் கொடுக்கிறார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரே இல்லாம வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடவே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் உட்பட 40 பேரின் மீதும் சென்னை மத்திய குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்கிறது.
2015 – போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.
2018 – இதேவிவகாரத்தில் அருள்மணி என்பவரும் மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையிடம் செந்தில் பாலாஜி மீது புகாரளிக்கிறார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கையும் விசாரித்தது.
2018 – டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.
2019 – செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் 1.62 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.
2021 – திமுக ஆட்சியை பிடித்த சமயத்தில் கரூரில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
2021 – அமைச்சரான சில மாதங்களிலேயே தன் மீது புகார் கூறியவர்களுடன் சமரசத்தை எட்டிவிட்டதால் தன் மீதான விசாரணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஜூலை மாதத்தில் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 – சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. அமைச்சர் செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் ரத்து செய்கிறோம். வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டிருந்தனர்.
2023 – செந்தில் பாலாஜியுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தொடர்புடைய இடங்களிலெல்லாம் அமலாக்கத்துறையினர் அடுத்தடுத்து ரெய்டுகளில் ஈடுபட்டனர்.
2023 ஜூன் 13 – சென்னையிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் இறங்கினர். தலைமைச் செயலகத்திலுள்ள அவரின் அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 17 மணி நேரமாக நீண்ட விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் 118 கேள்விகள் கேட்கப்பட்டது.
2023 ஜூன் 14 – அமலாக்கத்துறையின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்காத நிலையில் அதிகாலை 1:30 மணியளவில் அவரை கைது செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால், திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
2023 – மருத்துவமனையில் செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக அறியப்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
2023 – அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
2023-24 – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்டது.
2024 பிப்ரவரி – அமைச்சர் பதவியில் நீடிப்பது ஜாமீன் பெற தடையாக இருப்பதாக எண்ணிய செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
2024 ஆகஸ்ட் : டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவின் வழக்கை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜிக்கு ஏன் ஜாமீன் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி. வழக்கின் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
2024 செப்டம்பர் 26 – ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88