நீண்டநாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
எதன் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது? செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ.
“செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக வெறும் விசாரணை கைதியாகவே இருப்பதனால், அவருடைய அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்றார் இளங்கோ.
நிபந்தனைகள் என்ன?
“செந்தில் பாலாஜிக்கு இரண்டு நபர்கள் 25 லட்ச ரூபாய்க்கு ஜாமீன் உத்திரவாதம் வழங்க வேண்டும் என்றும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார் வழக்கறிஞர்.
மேலும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சி எடுக்கக் கூடாது என்றும், குற்றவியல் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
எல்லா வழக்குகளுக்கும் கொடுக்கப்படக் கூடிய நிபந்தனைகளே செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அடிப்படை உரிமைகளை பாதுகாக்க ஜாமீன்!
ஜாமீன் கொடுக்கப்பட்டது குறித்து, “பிஎம்எல்ஏ வழக்குகளில் அடிப்படை உரிமைகளை சிதைக்கும் விதமாக, ஜாமீனே வழங்கக்கூடாது என மத்திய அரசு வாதாடுவதை உச்ச நீதிமன்றம் எப்போதுமே கண்டித்து வருகிறது. உதாரணமாக, மணிஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்குகளை குறிப்பிடலாம்.” என்றார்.
“இந்த வழக்கின் மூலம் உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக யாரையும் நீண்ட நாள்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்று அழுத்தமாக தெரிவித்துள்ளது’ என்றார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
“குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை நடந்து முடிய நீண்ட நாள்கள் எடுக்கும். முதன்மை வழக்கு ஒன்றில் அதிக நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அந்த விசாரணைகள் எல்லாம் முடிந்து, அதன்பிறகு பிஎம்எல்ஏ வழக்கு விசாரணை நடைபெற எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்றேக் கூற முடியாது. அத்தனை நாட்கள் ஒருவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது என்ற காரணத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது” என விளக்கினார் வழக்கறிஞர்.
மீண்டும் அமைச்சராக பதவியேறகலாமா செந்தில் பாலாஜி?
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்கலாமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டபோது, “செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை” என்றார் வழக்கறிஞர் இளங்கோ.
இன்று மாலை அல்லது நாளை காலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வீடுதிரும்புவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88