நாம் தமிழர் கட்சி சார்பில் திலீபனின் 37-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திலீபனுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது,“ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை, திருமாவளவனின் கோரிக்கை என்று பார்க்க முடியாது. அது பொதுவான கோரிக்கை. கூட்டணி வைத்து எங்களின் வாக்குகளை பெற்றப் பிறகும் நான்தான் நாட்டாமை செய்வேன் எனக் கூறுவதை விட வேறு சனாதனம் என்ன இருக்கிறது…
தி.மு.க மட்டும் இந்திய ஒன்றிய அமைச்சரவையில் தொடர்ந்து 18 ஆண்டுகள் பங்கு கேட்டது ஏன்… நீங்கள் மட்டும் பங்கு கேட்கலாம் அதே போல இங்கே உங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கேட்கக் கூடாதா… தனித்து நின்று வென்று காட்டுங்கள். அதன் பிறகு பங்கு தரமாட்டோம் எனப் பேசுங்கள் பார்க்கலாம்… கூட்டணி வைப்பதால் கட்சியின் கோட்பாட்டிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதையும் மீறி உங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டுமல்லவா… அது முடியாது என்றால் ஒரு ரூபாய்கூட காசு கொடுக்காமல் வாக்கு வாங்கியில் வென்று காட்டுங்கள் பார்க்கலாம்.
மாணவர்களுக்கு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இன்னும் தேர்தலுக்கு 17 மாதங்கள் இருக்கிறது என்றால் ஒரு ஓட்டுக்கு ரூ.17,000 கொடுக்கிறார்கள். இந்த அரசு கல்விக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது, ஆசிரியர்கள் வீதியில் போராடி வருகிறார்கள், ஓய்வூதியப் பிரச்னை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, அனைவருக்கும் பொதுவான கல்வியை, தரமான கல்வியை கிடைக்க செய்வதுதான் புரட்சி. அப்படி ஒன்று இங்கு நடக்கிறதா…
தமிழ்நாட்டில் கல்வி ஒரு வியாபாரம். மற்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும். டெல்லியில் பள்ளிக்கூடங்கள் நட்சத்திர விடுதிகள் அளவுக்கு தரம் உயர்ந்திருக்கிறது. கேரளாவில் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 30 சதவிகித மாணவர்கள் அரசுக்கு பள்ளிக்கு திரும்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒப்பிடாமல் இல்லாததையே ஒப்பிடுவது எப்படி சரியாகும்?
எந்த மாநில முதல்வர் நாடு நாடாக சென்று கையேந்தியிருக்கிறார். 10 லட்சம் கோடி முதலீடு கொண்டுவந்து, 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டகாக கூறியிருக்கிறார். அப்படி ஏதும் நடந்திருக்கிறதா…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை தியாகம், பொறுமை என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் வாங்குவது, டாஸ்மாக் கடையை கூடுதல் நேரத்துக்கு நடத்துவது இதெல்லாம் தியாகம் என்றால், செக்கிழுத்தவர், தூக்கில் தொங்கவிடப்பட்டவர் செய்ததெல்லாம் என்ன?
செந்தில் பாலாஜி மீது இந்த வழக்கை தொடர்ந்தது யார்… தி.மு.க, அவர் அ.தி.மு.க-வில் இருந்தபோது போடப்பட்ட வழக்குக்குத்தான் சிறை சென்றார். லஞ்சம் வாங்கியவர் உங்கள் கட்சியில் இருந்தால் வீர தீர செயல். அடுத்தக் கட்சியில் இருந்தால் ஊழல், லஞ்சமாகிடுமா… அவர் அமைச்சராவதில் எந்தத் தடையும் இல்லை எனக் கூறுகிறார்கள். அப்படியானால் அவர் மீண்டும் அமைச்சராவர் என்று தானே பொருள்.
பெரியாருக்கு நாங்களும்தான் மரியாதை செய்கிறோம். அவரின் கோட்பாட்டை ஏற்கிறோம். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இவர்களெல்லாம் எங்கள் வழிகாட்டிகள். நடிகர் விஜய் பெரியார் நினைவிடத்தில் மாலை வைப்பதால் மட்டும், அவர் திராவிட அரசியலுக்கு சென்றுவிட்டார் என எப்படி சொல்ல முடியும்.
லட்டு விவகாரத்தில் கார்த்தி மன்னிப்பு கேட்டது எனக்கு வருத்தம்தான். ஆனால், அவருக்கும் அவரை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கம் அதுதான் பிழைப்பு. அதைக் காப்பாற்ற அவர் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால், சாதாரண லட்டு விவகாரத்தை இவ்வளவு பெரிய பிரச்னையாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதனால் எல்லாம் பெருமாள் மாசடைவார் என்றால், அவரை வைத்து கேலி செய்கிறார்களா… மதம், சாதி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்பவன் எப்போதும் மக்களுக்காக சிந்திக்க மாட்டான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
எது மக்களுக்கு முக்கியமானப் பிரச்னையாக இருக்கிறதோ அதைதான் பேச வேண்டும். சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வு என தொடர்ந்து தமிழ்நாட்டில் உயர்ந்து வருகிறது. இலங்கையில் இடதுசாரி பிரதமர் வந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது. இனி போகப் போகத்தான் அவரின் ஆட்சியைப் பற்றித் தெரியும்” எனப் பேசினார்.