‘தீபாவளி வருது…தங்கம் வாங்கலாம்…வித விதமான ஸ்வீட்டுகள் செய்யலாம்’ போன்ற ஒட்டுமொத்த ஆசைகளுக்கும் செக் வைத்திருக்கிறது ‘விலை உயர்வு’.
தங்கம் விலை என்ன?
கடந்த வாரம் வரை பம்மிக்கொண்டிருந்த தங்கம் விலை, இப்போது தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது கடந்த வார வியாழக்கிழமை, ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.6,825 மற்றும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.54,600. இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,060, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.56,480 ஆகும்.
நேற்று முந்தைய தினம் தங்கம் விலை முதன்முதலாக கிராமுக்கு ரூ.7,000-த்தையும், பவுனுக்கு ரூ.56,000-த்தையும் தொட்டது. அடுத்தடுத்து பண்டிகை காலம், முகூர்த்த நாட்கள் வரவிருக்கும் நிலையில், இது நிச்சயம் மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்கள், உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகித குறைப்பு, தங்கத்தின் மீதான அதிக முதலீடுகள் ஆகியவை தற்போதைய தங்க விலை உயர்வுக்கு காரணம்.
தற்போதைக்கு தங்கம் விலை குறையாது என்பது பொருளாதார நிபுணர்களின் பதிலாக உள்ளது.
வெள்ளியும் கூட…
‘தங்கம் விலை உயர்வு’ எல்லாம் ஓகே…வெள்ளி விலை என்று பார்த்தால்…அதுவும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மே மாதத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக வெள்ளி விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.101-க்கு விற்பனை ஆகி வருகிறது.
முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தோடு வெள்ளியிலும் முதலீடு செய்ய விரும்புவது தான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
எண்ணெய் எப்படி?
இந்தியாவின் 70 சதவிகித எண்ணெய் தேவை இறக்குமதி மூலமே பூர்த்தி ஆகி வருகிறது. இந்தியாவுக்கு, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா, ருமேனியாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்தில் சமையல் எண்ணெய்களின் சுங்க வரியை 20 சதவிதமாக உயர்த்தியது மத்திய அரசு. மேலும் இந்திய விவசாய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் வரி, சமூக நல கூடுதல் கட்டணங்களை வைத்து பார்க்கும்போது மொத்த இறக்குமதி வரி 5.5 சதவிகிதத்தில் இருந்து 27.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களின் வரி 13.75 சதவிகிதத்தில் இருந்து 35.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்திய எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு உதவத் தான் இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டது.
இந்த வரி உயர்வால், எண்ணெய் இறக்குமதி குறைவதோடு, இங்கே விற்கப்படும் எண்ணெய்களின் விலையும் உயரும். இப்போதே எண்ணெய் விலை உயர்வு தொடங்கிவிட்டது.
ஸ்வீட் ஜாக்கிரதை
தீபாவளியையும் பட்டாசையும் எப்படி பிரிக்க முடியதோ, அதே போலத்தான் தீபாவளியும், பலகாரங்களும். இப்போது உயர்ந்துள்ள எண்ணெய் விலை நாம் தீபாவளிக்கு வாங்கும் ஸ்வீட்டுகளின் விலையில் எதிரொலிக்கும். கடைகளில் ஸ்வீட் வாங்கினாலும் சரி…வீட்டிலேயே செய்தாலும் சரி…நிச்சயம் சென்ற ஆண்டு ஸ்வீட்டுக்கென செலவான பட்ஜெட்டில் இருந்து இந்த ஆண்டு பட்ஜெட் உயரும்.
இந்த விலை உயர்வு ஸ்வீட் பட்ஜெட்டிற்கு மட்டுமல்லாமல், நமது அன்றாட சமையல்களுக்கு பயன்படும் எண்ணெய் விலையிலுமே காணப்படும்.
காய்கறிகளின் விலை…
காலநிலை மாற்றம், இருப்பு ஆகியவற்றால் தற்போது காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு கடந்த வாரம் ரூ.45-க்கு விற்று வந்த தக்காளி, இந்த வாரம் ரூ.60-க்கு விற்று வருகிறது. சென்ற வாரம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.55, இந்த வாரம் அதன் விலை ரூ.72. மற்ற விலை ஏற்றத்தை விட, இந்த விலை ஏற்றம் அடிதட்டு மக்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது.
பெட்ரோல், டீசல்…
இன்றைய சூழலில் கொஞ்சம் ஆசுவாசம் தருவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தான். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் விலை குறைவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, அடுத்தடுத்து வரவிருக்கும் முக்கிய மாநிலங்களின் தேர்தல்கள் ஆகியவை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல், ஒரே விலையாகவே கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு நிலைநிறுத்தி வருகிறது. தேர்தல் போன்ற காரணங்களுக்காக பண்டிகை எனும் பெயரில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்களின் பார்வை
கடந்த சில நாள்களில் காய்கறி தொடங்கி தங்கம் வரை பல பொருட்களின் விலை ஏறியுள்ளது. இத்தோடு இந்த விலை ஏற்றம் நின்றுவிடும் என்று கட்டாயமாக எதிர்பார்க்க முடியாது. இன்னும் விலை ஏறலாம். இதற்கு பண்டிகை காலத்தை முக்கிய காரணமாக கூறலாம். அதற்கு பிறகும் கூட விலைகள் கூடலாம். இவற்றை சமாளிக்க தனி நபர் வருமானத்தை உயர்த்த அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இறக்குமதிகளை பொறுத்தவரை வரி உயர்வுகளை பார்த்து செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88