சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்
`காலாவதியான பின்னும் கந்துவட்டிகாரனைவிட மிக மோசமாக வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூட வேண்டும்’ எனக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 67 சுங்கச் சாவடிகள் இருக்கும் நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மேலும் புதியதாக 3 சுங்கச் சாவடிகளைக் கொண்டுவந்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இதன்மூலம் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, காலாவதியான சுங்கச் சாவடிகள் சாலை அமைத்ததற்கான மொத்த தொகையை வசூல் செய்த பின்னரும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளாக முறைகேடாக பணம் வசூல் செய்துவருவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன.
“60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடிதான் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக, குறைவான தூரத்திலும் பல்வேறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக வசூல் செய்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை ஃபாஸ்டேக்கில் பணம் இல்லை என்று கூறி உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிய அடாவடி சம்பவமும் அரங்கேறியுள்ளது.” என்று அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கிறது.
இப்படியாக தொடர்ந்து சுங்கச்சாவடி சர்ச்சைகள் நீண்டுகொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில், சட்டவிரோதமான சுங்கச் சாவடிகளை மூடவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல்கொடுத்ததோடு, போராட்டத்திலும் குதித்தனர். குறிப்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பரனூர், விக்கிரவாண்டி, பள்ளிக்கொண்டா, கருமத்தம்பட்டி, கப்பலூர், நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை ஒரே நேரத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தினம்தோறும் ரூ.50 கோடி வசூல் – ஜவஹிருல்லா
அதில், காலாவதியான செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட ம.ம.க தலைவர் ஜவஹிருல்லா, “தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் தினம்தோறும் ரூபாய் 50 கோடி சுங்க கட்டணமாக வசூல் கொள்ளை நடக்கிறது அதாவது ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி தமிழக மக்களுடைய பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 5 முதல் 7 விழுக்காடு உயர்த்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பேருந்து சுமையுந்து போன்ற கனரக வாகனங்களுக்கு மூன்று மாதம் ஒருமுறை சாலை வரி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாகனப் பதிவு, வாழ்நாள் வரி என ஆண்டுக்குச் சுமார் 7 ஆயிரம் கோடி தமிழ்நாட்டில் மட்டும் வரியாக வசூல் செய்யப்படுகிறது. இருப்பினும் சுங்கச்சாவடிக் கட்டணம் என்கிற பேரில் சாமானிய மக்களிடம் பெரும் பணம் கொள்ளை அடிக்கப்படுவது தொடர்கிறது.
நான்கு வழிச் சாலை மட்டுமே இருக்கும் நிலையில் ஆறு வழிச் சாலைக்கான கட்டண வசூல் செய்வது, காலாவதி ஆன நிலையில் கட்டண வசூலைத் தொடர்ந்து செய்வது எனச் சுங்கச்சாவடி வசூல் என்கிற நிலையைத் தாண்டி அது சுங்கச் சாவடி கொள்ளையாக மாற்றம் கண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடி 2019-ம் ஆண்டில் காலாவதி ஆன நிலையில் இன்னும் கட்டண வசூலைத் தொடர்ந்து செய்கிறது. இது போன்று இன்னும் பல்வேறு சுங்கச் சாவடிகள் காலாவதியான நிலையிலும் கட்டணக் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கந்துவட்டிகாரனின் வசூலை விட மோசமானது சுங்கச்சாவடி வசூல் என சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். கேரளாவின் அளவுகோலைப் பயன்படுத்தி 9 சுங்கச் சாவடிகளைத் தவிர மற்ற அனைத்துச் சாவடிகளும் மூடப்பட வேண்டும்!” என்றார்.
இந்தப் போராட்டத்தின்போது பரனூர் சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்டதால் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 300 பேர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
காலாவதியான சுங்கச் சாவடிகள்…
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 19-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, “தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என பலமுறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினோம். நேரில் சந்தித்தும் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், மூடமுடியாது என ஒன்றிய அரசு கூறுகிறது. அதேபோல, சுங்கச் சாவடி கட்டணத்தையாவது குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை!’ என குற்றம்சாட்டினார். முன்னதாக, தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கடிதம் எழுதியிருந்தார்.
சுங்க கட்டணத்தைக் குறைக்கும் திட்டம் இல்லை..
இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவு அலுவலர் வீரேந்தர் சம்பியால், “தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளை மூடவோ, சுங்க கட்டணத்தைக் குறைக்கவோ எந்தத் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை!” என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து அடுத்தடுத்த அரசியல் கட்சிகளும் சுங்கச் சாவடிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, `தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டங்களை நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள்!” என அறிவித்திருக்கிறார்.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காலாவதியான சுங்கச்சாவடிகளில் தனியார் வசூலிக்கிற தொகை யாருக்கு செல்கிறது? அதில் பயனடைபவர்கள் யார் என்று தெரியவில்லை ? விழுப்புரத்திற்கு அருகில் உள்ள நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடியில் வாகனம் ஒருமுறை செல்வதற்கு ரூபாய் 60 முதல் 400 வரை வசூலிக்கப்படுகிறது. அதே நாளில் திரும்புவதற்கு ரூபாய் 95 முதல் 600 வரை வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் கடுமையானது மட்டுமல்ல, பயணிகளை வஞ்சிக்கிற செயலாகும். இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகிறது ? அடிப்படை காரணம் என்ன ? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கட்டணம் வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சி.ஏ.ஜி அளித்த அறிக்கை
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவர்கள் வசூலிக்க வேண்டிய தொகையின் இலக்கு முடிந்தும் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூற விரும்புகிறேன். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தான் விளக்க வேண்டும்.
கடந்த 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என பகிரங்கமாக கூறப்பட்டிருந்தது. மேலும், நாட்டிலுள்ள ஆயிரம் சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச் சாவடிகளை சி.ஏ.ஜி. ஆய்வு செய்தது. அதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக ரூபாய் 132 கோடி வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது” என குற்றம்சாட்டியிருக்கிறார்.