“உணவகங்கள் முன் உரிமையாளர் பெயர், விவரங்கள்” உ.பி.யைத் தொடர்ந்து இமாச்சல் அரசு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும் உணவகங்களின் வெளியில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெயர்கள் பட்டியல் வைக்கத் திட்டம். இந்த உத்தரவு ஜனவரி முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படுமெனக் கூறப்படுகிறது.

தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் இமாச்சல பிரதேச நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் விக்ரமாதித்ய சிங்.

பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மாநிலத்தின் உத்தரவை அப்படியே காங்கிரஸும் பிறப்பித்துள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Kanwar yatra

உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு கன்வர் யாத்ரா (புனிதப் பயணம் செய்யும்) வழித்தடங்களில் உணவு மையங்களுக்கு வெளியே உணவக கடை, மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என உத்தரவிட்டது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கன்வாரி யாத்திரை செல்பவர்கள் அவர்கள் உண்ணும் உணவு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உத்தரபிரதேச அரசு கூறியது.

யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் உணவில் மலம், சிறுநீர் கலக்கப்படுவதாக பரவிய செய்திகளை அடுத்து உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி கடையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற விதியை வலுப்படுத்தியது உத்தரபிரதேச அரசு.

இதில், உணவக ஊழியர்கள் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.