செந்தில் பாலாஜி: `அவரின் காரைகூட சர்வீஸூக்கு விட்டு தயாராக வைத்திருக்கிறோம்’ – உற்சாக கரூர் திமுக

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய தி.மு.க., கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி, கடந்த 2023 -ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகச் சொல்லப்பட, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு பிணை கேட்டு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்படி அவர் செய்த பிணை மனுக்கள் பலமுறை நிராகரிப்பட்டன. இந்நிலையில், பாலாஜிக்கு பிணை கேட்டு அவரது வழக்கறிஞர் ராம் சங்கர் செந்தில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி

இந்த மனு மீதான விசாரணையைத் தொடங்கிய நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம், 20-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவுசெய்ததோடு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், பிணை மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் வழங்கியுள்ளனர். நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 15 மாதங்களாகச் சிறைவாசம் புரிந்து வந்த, அதாவது 471 நாட்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி தற்போது பிணையில் புழல் சிறையிலிருந்து வெளியே வர இருப்பதை அறிந்த கரூர் தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி, கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம்.

“கரூர் தி.மு.க., கேப்டன் இல்லாத கப்பலாகத் தத்தளித்து வந்தது. அ.தி.மு.க., கோட்டையாக இருந்த கரூரை தி.மு.க., கோட்டையாக மாற்றினார். ஆனால், அவர் இல்லாத இடத்தில் வேறு ஒரு நபரைப் பொறுப்பு அமைச்சராகவோ, பொறுப்பாளராகவோ நியமிக்க தி.மு.க., தலைமையே விரும்பவில்லை. அவர் கண் அசைவில் வளர்ந்த நாங்கள் அவரிடம் பயின்ற கட்சி வேலை பார்க்கும் திறனை வைத்துக்கொண்டு கட்சி நிகழ்ச்சிகள், வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செய்து வந்தோம். இருந்தாலும், அவர் இல்லாமல் தொண்டர்கள் உற்சாகம் குறைவாகவே காணப்பட்டனர். அவர் இந்தமுறை எப்படியும் வெளியில் வந்துவிடுவார் என்பதால்தான் அவரது காரைகூட சர்வீஸூக்கு விட்டு தயாராக வைத்திருக்கிறோம்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

புலி பாய்வதற்கு முன் பதுங்குவது என்று கேள்விப்பட்டிருப்பீர்களே… அதுபோலத்தான் இது. அதேபோல், ‘அமைச்சராவதற்குத் தடையில்லை’ என்று சொல்லப்பட்டுள்ளதால், எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகியுள்ளது” என்றார்கள்.