TVK : `2026-ல் த.வெ.க தலைவர் விஜய்தான் முதலமைச்சர்’ – ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த்

அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் த.வெ.க மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலைமையில் தற்போது கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்று வருகிறது. இதில் மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கான குழுக்கள் அமைப்பது மற்றும் அதில் நிர்வாகிகளை தேர்வு செய்து அதற்கான பணிகளை எவ்வாறு பார்த்து கொள்வது, பின்பு மக்களை மாநாட்டிற்கு அழைத்து வர நியமிக்கப்பட்ட இரண்டு பெண் நிர்வாகிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு எவ்வாறு மக்களை அழைத்து வர வேண்டும் என ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய் – புஸ்ஸி ஆனந்த்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , “அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் த.வெ.க-வின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான். 2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர்” என்று பேசியிருக்கிறார். அடுத்த மாதம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.