காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது ‘சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற தொழிற்சாலை. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1,800-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு, ‘தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். ஆனால் நிர்வாகம் இதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதையடுத்து கடந்த 9.9.2024 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளரும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான முத்துக்குமார், “தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும். நிர்வாகத்திற்கு ஆதரவாக அமைக்கப்பட்ட கமிட்டியை கலைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. சட்டப்படி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு சாம்சங் நிறுவனம் செவி சாய்க்கவில்லை. மாறாகச் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் வெளியில் வர வேண்டும் எனத் தனி அறையில் வைத்து மிரட்டினார்கள். மேலும் விடுமுறை கிடையாது, மருத்துவக்காப்பீடு வேலை செய்யாது என்றெல்லாம் அச்சுறுத்தினார்கள். ஆனாலும் நாங்கள் பின்வாங்கவில்லை.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர், செயலாளர், கூடுதல் ஆணையர், துணை ஆணையர் முன்பு என ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு எங்களது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததுதான். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக ஊழியர்களைக் கைது செய்தார்கள். தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் ‘போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் வரும் திங்கட்கிழமை முதல் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பிரச்னையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், சட்டவிரோதமாகப் போராடுவது சரியில்லை’ எனத் தொழிற்சாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனாலும் ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதாக இல்லை.
இவ்வாறு இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்திருக்கும் சூழலில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “உற்பத்தித் துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவான, தீர்க்கமான தீர்வை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர முடியாததன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. எனவேதான் அவர்கள் தொழிற்சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இது சட்டப்படியான நடவடிக்கைதான். ஆனால் இதற்குத் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறைதான் ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் தொழிற்சாலையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்கள். எனவேதான் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. முதலில் தொழிற்சங்கத்துக்கு ஒப்புதல் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு கோரிக்கைகள் குறித்து பேசிக்கொள்ளலாம்” என்றார்.
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக சாம்சங் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையைத் தொடர்பு கொண்டபோது நம்மிடம் பேசியவர், “இதுகுறித்தெல்லாம் டெல்லியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலிருந்துதான் பேசுவார்கள்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். பிறகுத் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடமே விளக்கம் கேட்டோம், “தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சாம்சங் தொழிற்சாலை பிரச்னையை விரைவில் சுமுகமாக முடித்துவிடுவோம்” என்றார்.