சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதைத் தடுக்க முயன்ற இளைஞரையும் இரும்பு பைப்பால் தலையில் பலமாகத் தாக்கி, ஒரு கும்பல் மது போதையில் அட்டூழியம் செய்திருப்பது பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊரைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். “அந்தப் பெண் திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கூலி வேலைகள் செய்துதான் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறார்.
இந்தச் சூழலில் பக்கத்து ஊரைச் சேர்ந்த அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளைஞரோடு அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட நிலையில் புதுவாழ்க்கையைத் தொடங்கும் மனநிலையில் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு பெண்ணின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் பொது இடங்களில் சந்தித்துப் பேசிவந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு மானாமதுரை-இளையான்குடி சாலை அருகே அப்பெண்ணும் அர்ஜுனும் பேசிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது அந்தப் பக்கமாக வந்த மதுபோதையிலிருந்த இரு இளைஞர்கள், அந்தப் பெண்ணை நோக்கித் தவறான சைகைகளைக் காட்ட, அதனால் கோபமடைந்த அர்ஜுன், மது போதையிலிருந்த இளைஞர்களைத் திட்டியிருக்கிறார்.
ஆனால், போதையின் உச்சத்திலிருந்த இருவரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ததோடு, அர்ஜுனைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பிறகு, இளம்பெண்ணிடமும் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்கள். இதனை அர்ஜூன் தடுக்க முயன்றபோது, அவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியிருக்கிறார்கள். ரத்த காயங்களோடு உதவிக்கு ஆளைக் கூப்பிட அர்ஜூன் முயன்றிருக்கிறார். ஆனால், தலையில் அடிபட்டவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே, போதையிலிருந்த இளைஞர்கள் இருவரும் அந்தப் பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். செல்போன் மூலமாக மேலும் தங்கள் கூட்டாளிகள் மூன்று பேரை அங்கு வரச் செய்திருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் தன்னை விட்டுவிடச் சொல்லி அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சியும் அந்தக் கொடூரர்கள் மனமிறங்கவில்லை. நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை சிதைத்திருக்கிறார்கள். பிறகு, நடந்ததையெல்லாம் வெளியே சொன்னால், குடும்பத்தோடு கொளுத்திவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். போலீஸார் வந்து எங்களிடம் விசாரித்த பிறகுதான் இதெல்லாம் எங்களுக்குத் தெரியவந்தது” என்றனர் விரிவாக.
காவல்துறை தரப்பில் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து எங்களுக்கு முதலில் புகார் வரவில்லை. பைக்கில் வரும்போது தன்னை கடுமையாக தாக்கி மொபைலை சிலர் பிடுங்கிக் கொண்டார்கள் என்று அந்த இளைஞர் வீட்டில் பொய் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏற்பட்ட காயங்களைப் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தோம். அப்போதுதான் மிகுந்த தயக்கத்துடன் தனக்கு என்ன நடந்தது என்பதையும், தன்னுடன் பழகிவந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தையும் அந்த இளைஞர் எங்களிடம் தெரிவித்தார். .
பிறகு, இது தொடர்பாக உடனடியாக மானாமதுரை டி.எஸ்.பி-க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவரின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலும் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், முத்துக்குமார் என்பவரை முதலில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தோம். அவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வில்வகுமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி உள்ளிட்ட இளைஞர்களே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவருமே 21 முதல் 25 வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தங்களைக் கைது செய்யப்போகிறது என்று தெரிந்தது தப்பி ஓட முயன்ற முத்துக்குமாருக்கும், வில்வகுமாருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள்” என்றனர்.
இது குறித்து மானாமதுரை டி.எஸ்.பி நிரேஷிடம் கேட்டோம், “பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் புகாரைப் பெற்று, அதனடிப்படையில் ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. மானாமதுரை வட்டாரத்தில் இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். பெண்கள் மீதான வன்முறை குற்றங்களைத் தடுக்கும் விதமாக கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். குறிப்பாக இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க இருக்கிறோம்” என்றார்.