தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தைகள் `அதிகாரப் பகிர்வு’.
வி.சி.க-வின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டுக்குத் திருமாவளவன் சாதிய, மதவாதக் கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த நிலையில், அதில் அ.தி.மு.க-வுக்கும் அழைப்பு உண்டு என திருமாவளவன் தெரிவிக்க அதைத் தொடர்ந்து அவரின் எக்ஸ் தளப் பக்கத்தில், `ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என அவர் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால், திருமாவளவன் கூட்டணி மாறப்போகிறார் என்று பரவலாகப் பேச்சுகள் அடிபட, `தி.மு.க கூட்டணியில்தான் நீடிக்கிறோம். கூட்டணி வலுவாக இருக்கிறது’ என்று அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேசமயம், `அதிகாரத்தில் பங்கு’ என்பது வி.சி.க-வின் இலக்கு என்பதையும் அவர் அழுத்தமாகப் பதிவுசெய்துவருகிறார். வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர்களும், செல்லும் இடங்களிலெல்லாம் இதனைப் பரவலாகக் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, `நான்காண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக இருக்கும் எங்கள் தலைவரைத் துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை. அதிகாரத்தை அடைவதுதான் ஒரு கட்சியின் இலக்காக இருக்க முடியும்’ என்று கூறியதும், அதற்கு தி.மு.க எம்.பி ஆ.ராசா, `நேற்று வந்தவர் அரசியல் புரிதலின்றி பேசுகிறார்’ என்று எதிர்வினையாற்றியதும் கூட்டணி விவாதப்பொருளாக மாறியது.
அதற்கும், `கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக உட்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டுதான் எந்த நடவடிக்கையும் இருக்கும்’ என்று தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன். இவ்வாறாக, அதிகாரப் பகிர்வு என்பதை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க மட்டுமே தொடர்ச்சியாகப் பேசிவருகிறது. இதனால், அதிகாரப் பகிர்வு என்ற விஷயத்தில் தி.மு.க கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்று அறிய கூட்டணி கட்சியின் தலைவர்களிடம் பேசினோம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “அதிகாரம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற விஷயங்களில் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். இப்போது கூட்டணியில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வரிடம் அகில இந்திய தலைமை பேசும். இன்னும் 20 மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்” என்று கூறிவிட்டார்.
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
“எங்களைப் பொறுத்தவரையில், மந்திரி பதவி கிடைப்பதாலோ, முதலமைச்சராக வந்துவிடுவதாலோ அதிகாரத்துக்குச் சென்றுவிட்டதாக அர்த்தமில்லை. மக்களின் வாழ்வாதார பிரச்னைகளைப் பூர்த்தி செய்கிற குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை ஏற்றுக்கொள்கிற கட்சிகள் ஒன்றிணைந்து, அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று அந்த செயல் திட்டத்தைச் செயல்படுத்துகிற கூட்டணி உண்மையான கூட்டணி. இப்போது எங்களின் குறைந்தபட்ச செயல்திட்டம், மத்தியில் பா.ஜ.க-வை எதிர்ப்பதும், கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பதும்தான்.
எங்களின் ஆதரவோடு தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ஆட்சி நடத்துவதற்கான முழுமையான உரிமை தி.மு.க-விடம் இருக்கிறது” என்று கூறியவரிடம், மக்களுக்காகக் கோரிக்கை வைக்கின்ற இடத்திலிருந்து அதை நிவர்த்தி செய்கிற அதிகார இடத்துக்குச் செல்வது குறித்து கேட்டபோது, “தமிழ்நாட்டில் நாங்கள் இன்னும் ஆட்சிக்கு வரக்கூடிய இடத்துக்கு வளரவில்லை. அதன்பிறகு அவ்வாறான கூட்டணியை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டிய தேர்தல் நேரத்தில், புதிய கூட்டணி உருவாக்குவது குழப்பத்தை உண்டாக்கும்.
மேலும், எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் மட்டும் விரும்பினால் போதாது, மக்களிடம் செல்வாக்கு வேண்டும். சொந்தமாக பலமில்லாமல் மற்றவர்களின் பலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்தால், அவர்கள் சொல்வதைத் தான் செய்வதுபோல வரும். தனிப்பட்ட பலம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அதைப்பற்றி யோசிக்க முடியும். அதற்கு, நாங்கள் சொல்லும் குறைந்தபட்ச செயல் திட்டம் வரவேண்டும் என மக்கள் விரும்புகின்ற சூழல் உருவாக வேண்டும். சிறிது காலம் அதற்குத் தேவைப்படும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:
“அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றுதான் அனைவரும் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரம் கூட்டணியாகவா அல்லது தனியாகவா என்பது தனிப்பட்ட விஷயம். அதற்கான சூழல் வரும்போது அந்தந்த கட்சிகள் வரும். இப்போது தி.மு.க கூட்டணியில் இருப்பதால், எங்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கேட்பதற்கான நேரம் இதுவல்ல. தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் அதைப் பற்றி பேசலாம்.
மக்கள் பிரச்னைகளுக்குப் போராட ஆட்சியில் இருக்கவேண்டும் என்றில்லை. மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தொடர்ந்து நாங்கள் போராடுவோம். பிரச்னைகள் தொடர்பாக அரசை வலியுறுத்துவோம். இயக்கங்கள் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்” என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கும் சூழலில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் முடிவுசெய்யும்.