உ.பி: `பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்… சிசிடிவி கட்டாயம்’ – உணவகங்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 12-ம் தேதி சஹரான்பூர் மாவட்டத்தில் உணவகத்தில் ரொட்டி தயாரித்த போது அதில் எச்சில் துப்புவது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதே போன்று கடந்த வாரம் காஜியாபாத்தில் ஜூஸ் தயாரித்த போது அதில் சிறுநீர் கழித்த வீடியோ ஒன்றும் வைரலானது. இது தொடர்பாக ஜூஸில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார். அதோடு உணவுப் பொருளில் மனித கழிவுகளை கலக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்களால் உணவகங்களில் மக்கள் சாப்பிட தயக்கம் காட்டி வருகின்றனர். இச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும், அனைத்து உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் ஆய்வு செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஜூஸில் சிறுநீர் கலந்த நபர்

அதோடு உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்றும் உணவக உரிமையாளர்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் உணவகங்களில் பெயர் பலகையில் அதன் உரிமையாளர் அல்லது மேலாளரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறவேண்டும் என்றும், சமையல்காரர் மற்றும் வெயிட்டர்கள் கையுரை மற்றும் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக இப்பிரச்னை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

யோகி ஆதித்யநாத்

இதில் உணவுப் பொருள்களில் கழிவுகளை கலப்பது கொடூரமானது என்றும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார் மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்வரின் உத்தரவை சமாஜ்வாடி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி எம்.எல்.ஏ ரவிதாஸ் கூறுகையில், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் உணவகங்களில் வியாபாரத்தை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.