இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
நவம்பர் 21ம் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2025 வரை இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியில் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதாகத் தெரிவித்திருந்ததன்படி, உத்தரவிட்டுள்ளார்.
“மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படாத நாடாளுமன்றத்துடன் ஆட்சியைத் தொடர்வதில் எந்த நன்மையும் இல்லை” என அவர் தெரிவித்திருந்தார்.
2020ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 255 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளுமன்றம் கலைக்கப்பட்டாலும் திசாநாயக்க, அமரசூரிய மற்றும் ஹேரத் ஆகிய மூன்று உறுப்பினர்கள் காபந்து அமைச்சர்களாக நீடிப்பர்.
ஹரிணி அமரசூரிய கடந்த செவ்வாய்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொருத்தவரையில் அதிபரே அமைச்சர்களை நியமிப்பதுடன், அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுவார். பிரதமர் அதிபரின் பிரதிநிதியாக செயல்படுவார்.
முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) $2.9bn பிணை எடுப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதும் அநுர குமார திசாநாயக்க முன்னிருக்கும் உடனடி சவால்கள்.
கடந்த சனிக்கிழமை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராவார். கடந்த தேர்தலில் 3% வாக்குகளை மட்டுமே பெற்ற இவர், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஊழல் மற்றும் வறுமைக்கு எதிரான திசாநாயக்கவின் கொள்கைகள் மக்களைக் கவர்ந்துள்ளன.