கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்த சிறப்பு நீதிமன்றம்! – பின்னனி என்ன?

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதுமட்டுமின்றி சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. இந்த சம்பவங்கள் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

சித்தராமையா

இந்த விவகாரங்கள் தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சித்தராமையா

அந்த தீர்ப்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.