Tirupati: `சந்திரபாபு கூறிய பொய்யால் ஏற்பட்ட களங்கம்…’ – கட்சி சார்பில் பூஜை அறிவித்த ஜெகன் மோகன்

‘திருப்பதி லட்டு’ விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், திருப்பதி கோயிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் பூஜையில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பதி கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், களங்கத்தைத் துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் பூஜையில் ஈடுபடவுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் தலைவர்கள் வரும் 28 ஆம் தேதி பூஜை நடத்த இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு கூறிய பொய்கள் மூலம் திருப்பதி கோயிலுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் இந்த பூஜையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.