ஹரியானா சட்டமன்றத்திற்கு வ-ரும் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதன்முறையாக போட்டியிடுகிறார். ஒலிம்பிக் போட்டியில் கடைசி நேரத்தில் பதக்கத்தை தவறவிட்ட வினேஷ் போகத், மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதோடு பஞ்சாப்பில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் வினேஷ் ஆதரவு தெரிவித்தார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வினேத் போகத், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தேர்தல் வினேஷ் போகத்திற்கு எளிமையாக இருக்காது என்பதே களநிலவரமாக இருக்கிறது. ஜுலானா தொகுதியில் அதிக அளவில் ஜாட் இன மக்கள் வசிப்பதால் பெரும்பாலான கட்சிகள் தங்களது வேட்பாளரை ஜாட் சமுதாயத்தில் இருந்து தேர்வு செய்துள்ளன. பா.ஜ.க மட்டும் இதில் இருந்து விலகி வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பாக மற்றொரு மல்யுத்த வீராங்கனை கவிதா தலால் போட்டியிடுகிறார். இவர் தனக்கு ஜாட் சமுதாயத்தின் தலால் கோத்ரத்தைச் சேர்ந்த 6 கிராம மக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜன்நாயக் ஜனதா கட்சியின் அமர்ஜித் தாண்டே தனக்கும் இந்த 6 கிராம மக்களின் ஆதரவு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய லோக்தள் கட்சியும் ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த சுரிந்தர் என்பவரை நிறுத்தி இருக்கிறது. ஒரே சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இத்தொகுதியில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரியும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டுதான் பா.ஜ.க ஜாட் சமுதாயத்தைச் சேராத கேப்டன் யோகேஷ் என்பவரை களத்தில் நிறுத்தி இருக்கிறது. இவருக்கு ஒ.பி.சி மற்றும் எஸ்.சி மட்டுமல்லாது பிராமணர்களின் ஓட்டுக்களும் கிடைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. கேப்டன் யோகேஷ் கொரோனா காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டார். அதோடு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதும் மீட்புப் பணியில் பெரும் பங்காற்றினார்.
எனவே அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக பா.ஜ.க கருதி தேர்தலில் நிறுத்தி இருக்கிறது. ஜுலானா தொகுதி உண்மையில் காங்கிரஸ் செல்வாக்குள்ள பகுதியாகும். 2000, 2005 தேர்தலில் இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2009 மற்றும் 2014 தேர்தல்களில் இந்திய லோக்தள் கட்சி வெற்றி பெற்றது. கடைசியாக ஜன்நாயக் ஜனதா கட்சி இங்கு வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வினேஷ் போகத் செல்லும் இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், அவரை கடைசி நேரத்தில் ஜுலானா தொகுதி வேட்பாளராக அறிவித்ததில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ பர்மிந்தர், தர்மேந்தர், ரோஹித் தலால் ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் வினேஷிற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகின்றனர். வினேஷ் எதிர்ப்பை சந்தித்து வந்தாலும், தன்னை ஜுலானா தொகுதி மருமகள் என்று கூறி பிரசாரம் செய்து வருகிறார். அவர் தேர்தல் பிரசாரத்தில், தான் அரசியலில் ஈடுபடுவது தனது விருப்பம் இல்லை என்றும், தேவையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வினேஷ் கணவர் ஜுலானா தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால் வினேஷ் சார்கி தக்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். வினேஷிற்கு எதிராக பலமுனைப்போட்டி நிலவுவதால் களத்தில் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார். அவரது சொந்த வீட்டில்கூட வினேஷிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி இருந்தும் மல்யுத்த வீரர்களின் துணையோடு வினேஷ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வினேஷ் போகத் மற்றும் பல மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.