ஆந்திரா டு மதுரை; கொரியர் பார்சலில் 24 கிலோ கஞ்சா கடத்தல்… இருவர் கைது!

பொம்மை பார்சல் எனக்கூறி கொரியர் மூலமாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு 24 கிலோ கஞ்சாவை கடத்திய பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா

மதுரை பைபாஸ் சாலையிலுள்ள பிரபல கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து வெள்ளை நிற சாக்கு பார்சலில் வந்துள்ளது.

பொம்மைகள் என குறிப்பிடப்பட்டிருந்த பார்சலில் முழு முகவரி இல்லாமல் விக்கி, சிம்மக்கல் என்று இருந்ததால், குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு கொரியர் ஊழியர்கள் தொடர்பு கொண்டு முழுமையான முகவரி கேட்டுள்ளார்கள். அப்போது போனில் பேசிய நபர், முழு முகவரியை கூறாமல் தான் இருக்கும் இடத்திற்கு வந்து பார்சலை தாருங்கள் எனக் கூறியுள்ளார்.

பொம்மை என குறிப்பிட்டிருந்த பார்சல் இவ்வளவு எடையுடன் இருப்பது ஏன் என்று சந்தேகமடைந்த கொரியர் நிறுவன ஊழியர்கள், எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்குரிய பார்சலை பிரித்துப் பார்த்தபோது உள்ளே 12 சிறு சிறு பார்சல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர்கள்

ஒவ்வொரு பார்சலிலும் சுமார் 2 கிலோ 50 கிராம் அளவிற்கு கஞ்சா இருப்பது தெரியவர அதன்பின்பு வருவாய்த்துறையினர் முன்பாக 24 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பார்சலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆந்திராவிலிருந்து கொரியர் பார்சல் மூலம் கஞ்சாவை கடத்தியது மதுரை செல்லூரை சேர்ந்த செல்லவீரு என்ற இளைஞரும், அனுப்பானடியை சேர்ந்த திருக்கம்மாள் என்ற பெண்மணியும் என்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துரிதமாக விசாரணை நடத்தி நூதனமாக கஞ்சா கடத்தியவர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான எஸ்.எஸ்.காலனி போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

சில நாட்களுக்கு முன்புதான் கஞ்சா கடத்தலை தடுப்பது தொடர்பாக கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் உள்ளிட்டோருடன் கமிஷனர் லோகநாதன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன் விளைவாக கொரியர் நிறுவனத்தினர் உஷாராக செயல்பட்டு போலீசுக்கு அளித்த தகவலால் மிகப்பெரிய கஞ்சா கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.