வேளாண் நிதிநிலை அறிக்கை… வெறும் கண்துடைப்பா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

* சர்வதேச தோட்டக்கலைப் பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ.10 கோடி நிதி!

* காவிரி டெல்டாவில் 5,338 கி.மீ தொலைவுக்கு ஆறு, கால்வாய்களைத் தூர்வார 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு 200 கோடி ரூபாய்.

* இந்த ஆண்டில் கூடுதலாக 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இவையெல்லாம், தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 2024-25-ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைத் தாக்கல் செய்தபோது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தவை. இதுபோல இன்னும் பற்பல திட்டங்கள், அந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றன.

இவற்றில் எத்தனை திட்டங்கள் அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பதுதான் கேள்விக்குறியே.

‘‘வேளாண் நிதிநிலை அறிக்கையில் பேரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு… பெயரளவுக்கு வேலை செய்கிறார்கள்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் முழுமையாகச் செயல்படவில்லை.

50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை’’ என்று விவசாயிகள் படிக்கும் புகார் பட்டியல் நீளுகிறது.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘‘வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை நாங்கள்தான் தாக்கல் செய்தோம்’’ என்ற பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இம்முறை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடங்கியது என்பது சாதனையே. ஆனால், நான்காவது தடவையாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும்கூட, அதனால் விளைந்த நன்மைகள் என்னவென்று விவசாயிகளுக்கே தெரியாமல் இருப்பது வேதனைதானே!

அறிவிக்கப்பட்டவற்றில் உண்மையிலேயே நிறைவேற்றப்பட்டவை எத்தனை? அவற்றால் கிடைத்த பலன்கள் என்னென்ன? பலன் பெற்றவர்கள் உண்மையான விவசாயிகள்தானா? என்பதையெல்லாம் உறுதிப்படுத்துவதுதான் இப்போது அவசியம்.

இவற்றையெல்லாம் கண்டறிவதற்கு முன்னோடி விவசாயிகள், உண்மையான செயற்பாட்டாளர்கள், பொதுநலவாதிகள் அடங்கிய குழு அமைத்து, களஆய்வு செய்ய வேண்டும். இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் பலன்கள் உண்மையான விவசாயிகளுக்கு உள்ளபடி சென்று சேரும். ‘வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை நாங்கள்தான் தாக்கல் செய்தோம்’ என்று ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்வதிலும் அர்த்தம் இருக்கும்.

இல்லையெனில், வழக்கம்போல மொத்தமும் கண்துடைப்பாகவேதான் இருக்கும்.

– ஆசிரியர்