விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணை முதலமைச்சர் பதவி மற்றும் வட மாவட்டங்களில் தி.மு.க, வி.சி.க வாக்கு அரசியல் குறித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக இருக்கிறது.
மேலும், இதற்கு எதிர்வினையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “நேற்று வந்தவர் அரசியல் புரிதலின்றி பேசுவது கூட்டணி அரணுக்கு ஏற்புடையதல்ல, திருமாவளவன் இதை ஏற்கக் கூடாது” என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இருகட்சிகளின் தலைமை இந்த விவகாரத்தில் அமைதியாகவே இருக்கிறது. இந்த நிலையில், வி.சி.க-வின் மற்றொரு துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜுனா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வட மாவட்டங்களில் வி.சி.க இல்லாமல் தி.மு.க ஜெயிக்க முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு வன்னி அரசு, “தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் 2021 தேர்தலில் ஆறு தொகுதிகள் கொடுத்தாலும் பரவாயில்லை, இடங்கள் முக்கியமல்ல இலக்குதான் முக்கியம் என தி.மு.க கூட்டணியில் சேர்ந்தோம். தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் வி.சி.க வெற்றி பெறவில்லை. இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் சேர்ந்துதான் வெற்றிபெற்றிருக்கிறோம். அப்படித்தான் வெற்றிபெற முடியும். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். நாங்கள் இல்லாமல் அவர்கள் வெற்றிபெற முடியாது என்று சொல்வதைக் கூட்டுப் புரிந்துணர்வு முயற்சியின் பின்னடைவாகத்தான் பார்க்க முடியும்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, நேற்று சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதல்வராகும்போது, திருமாவளவன் ஏன் துணை முதல்வராகக் கூடாது என்று ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து கேட்டதற்குப் பதிலளித்த வன்னி அரசு, “வி.சி.க-வை அதிகாரத்துக்கு கொண்டுவர வேண்டும். எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. அதனடிப்படையில்தான் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
இருப்பினும், அவரின் தனிநபர் விமர்சனம் ஏற்புடையதல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து. வி.சி.க அதனை ஏற்காது. தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடர்கிறது. 2026-லும் தி.மு.க-வுடன் கூட்டணி என்பதைத் தலைவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அதேசமயம், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று தெரிவித்தார்.