திமுக-வை தாக்கும் ஆதவ் அர்ஜுனா… மெளனம் காக்கும் திருமாவளவன் – பின்னணி என்ன?!

தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வரும் வகையில் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிவருகிறார். இதற்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் ரியாக்ட் செய்தாலும் வி.சி.க தலைவர் திருமாவளவன் மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி கொடுத்த வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதே அரசியல் முதிர்ச்சி” என்றிருந்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் “வட மாவட்டங்களில் வி.சி.க இல்லாமல் தி.மு.க-வால் வெல்ல முடியாது’ என்ற அதிரடித்தார்.

இவரின் பேச்சு தி.மு.க-வினரை சூடாக்கவே தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவனின் ஒப்புதலுடன் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம்” என்றார். நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் “ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தி.மு.க-வினரை மட்டுமல்ல, வி.சி.க முக்கியப் புள்ளிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உதயநிதியுடன் ஆ.ராசா

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், வட மாவட்டங்களில் வி.சி.க இல்லாமல் வெல்ல முடியாது என்பதெல்லாம் உண்மைக்கு புறம்பானதாகவும் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சாகவும் இருக்கிறதென சாடியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வி.சி.க-வின் முன்னணி பொறுப்பாளர்கள் தொடங்கி திருமாவளவன் வரை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்கிறார்கள் திருமாவுக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அவரின் ஒப்புதலுடன் பேசவில்லை என்றால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் தி.மு.க-வுக்கு எதிராக பேசும் அர்ஜுனாவை அவர் ஏன் கட்டுப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய விசிக தலைமைக்கு நெருக்கமானவர்கள் “ஆதவ் அர்ஜுனா பேச்சு சர்ச்சையாகியிருந்தாலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் கட்சியின் கொள்கைதான். வட மாவட்டங்களில் வி.சி.க வலுவாக இருப்பதாக அவர் சொல்லும் கருத்தை மறுக்கவும் முடியாது என்பதால் ஒரே அடியில் திருமா-வால் மறுக்க முடியாது. ஆகவே இவ்விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது” என்றனர்.

திருமாவளவன் எம்.பி

திமுக கூட்டணியில் தொடர்வது, வெளியேறுவது என இரு கருத்துக்கள் கட்சிக்குள் இருப்பது, இதன்மூலம் தெளிவாகிறது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். “கூட்டணியில் தொடர்வது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என புதிய வரவுகளும் வெற்றியை தரும் தி.மு.க கூட்டணியையே தொடர வேண்டும் என முன்னணி பொறுப்பாளர்களும் விரும்புகிறார்கள். குழப்பம் தொடருமேயானால் மது ஒழிப்பு மாநாட்டில் இந்த எதிர்ப்பு குரல் மேலும் வலுவடையும். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு திருமாவளவன் உரிய நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் வி.சி.க தனிமைப்படும் அபாயம் இருக்கிறது” என எச்சரிக்கிறார்கள்.

திருமாவளவன் என்னச் சொல்லப் போகிறாரென பொறுத்திருந்து பார்ப்போம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb