“ஆர்.எஸ் பாரதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு வாயில் மட்டுமல்லாமல் உடம்பெல்லாம் கொழுப்பாக உள்ளது, நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள்..” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக பேசியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசும்போது, “திமுக-வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அம்மா இறந்து விட்ட பிறகு எதற்கு அம்மா உணவகம் என்றும், அம்மா உணவகத்தில் வீணாகிப் போன உணவுகள்தான் பரிமாறப்பட்டது என்றும், இரவில் சப்பாத்தி குருமா ஆகிவற்றை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் சாப்பிடுகிறார்கள், நமது வரிப்பணம் அவர்களுக்கு சாப்பாடாக போகிறது என்றும் வாய்கொழுப்புடன் பேசி உள்ளார் .
தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் 650 அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கினார். வெளிநாட்டவர் கூட இதை பாராட்டினர், பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தலாம் என்று பாராட்டி விட்டுச்சென்றனர். எடப்பாடியார் ஆட்சியில் கொரோனா காலத்தில் அம்மா உணவகம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
தமிழகத்தில் 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது, இதில் பல்லாயிரக்கண மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் 500 கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார். இதையெல்லாம் ஆர்.எஸ் பாரதி படித்தாரா? அப்படி இல்லையென்றால் உங்கள் அமைச்சரிடமே கேளுங்கள்.
இன்றைக்கு கருணாநிதி மறைந்துவிட்டார் அவரது பெயரில் நூலகங்கள், மைதானங்கள் உள்ளது. எதற்கெடுத்தாலும் அவர் பெயரை வைக்கின்றனர், இதற்குதான் ஆர்.எஸ்.பாரதி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அதிமுகவிற்கு முதுகெலும்பு வளைந்துவிட்டது, நிமிர முடியாது என்று வாய்கொழுப்புடன் பேசி உள்ளார். இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையில், அதிமுக நிமிர்ந்து நிற்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வசை பாடினீர்கள், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சரை அழைத்து நாணயத்தை வெளியிட்டபோது எப்படி முதுகெலும்பு வளைந்து நெளிந்து எப்படி நின்றீர்கள் என்பதை தமிழ்நாடு மக்கள் அறிவார்கள்.
இன்றைக்கு திமுகவின் மூத்தவர்கள் அமைச்சர்களாக இருக்க, உதயநிதி மட்டும்தான் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒட்டுமொத்த திமுகவினரும் முதுகெலும்பை வளைத்து குனிந்து நிற்கிறீர்கள்.
நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபொழுது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள்? உங்கள் குடும்ப வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகவே ஆர்.எஸ்.பாரதிக்கும் தயாநிதி மாறனுக்கும் வாய்க்கொழுப்பு மட்டுமல்லாது, உடம்பு முழுவதும் கொழுப்பாக உள்ளது, ஆகவே நல்ல மருத்துவரை நீங்கள் இருவரும் பார்த்தால் நல்லது” என்று பேசினார்.