`அரைகுறை புரிதலுடன் இயக்குநர் ஜி.மோகனைக் கைதுசெய்வதா?’ – ராமதாஸ் கண்டனம்

திருப்பதி லட்டு தயாரிப்பில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாக பிரச்னை வெடித்திருக்கும் இந்த சூழலில், தமிழ் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், பிரபல கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாக பேசும் வீடியோ பரவி வருகிறது. இவ்வாறிருக்க, இன்று காலை திருச்சி சைபர் கிரைம் போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஜி.மோகன்

இந்த நிலையில், ஜி. மோகனை உடனடியாக விடுதலை செய்யுமாறு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ராமதாஸ், “தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யூடியூப் நேர்காணல் அளித்ததற்காகத் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இயக்குநர் மோகன் அளித்த நேர்காணலைப் பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

யூடியூப் நேர்காணலில், `புகழ்பெற்ற கோயில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால்தான் நான் இதைச் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டித் தெரிவிக்கவில்லை.

டாக்டர் ராமதாஸ்

காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றுதான் கூறியிருக்கிறார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொதுநலன் கருதி கூறியதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்துகொண்டு மோகனைக் கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX