சென்னை: பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி… மிக்ஸட் வைரஸ் பரவல்? மருத்துவர் சொல்வதென்ன?

சென்னையில் தற்போது, காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி என பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இது என்ன பிரச்னை என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். 

“சென்னையில இப்போ, ஒரு மிக்ஸட் வைரல் இன்ஃபெக்‌ஷன்ஸ் பரவிட்டிருக்கு. சளி, இருமல், காய்ச்சல்,  கை-கால் வலி போன்றவை தான் இதோட அறிகுறிகள். கூடவே, அங்கங்கே h1n1 influenza வைரல் இன்ஃபெக்‌ஷனும் காணப்படுது. சில மாதங்களுக்கு முன்னாடி, மூட்டுகளில் வீக்கம், வலியோட ஒரு வைரல் இன்ஃபெக்‌ஷன் பரவிக்கிட்டு இருந்துச்சு. அந்தத் தொற்றும் இப்போ வரைக்கும் சிறிதளவு இருந்துட்டு தான் இருக்கு. 

வைரஸ

இந்த வைரல் இன்ஃபெக்‌ஷன்ஸ் எல்லா வயதினருக்குமே வரும் என்றாலும், குழந்தைகளையும் 60 வயசுக்கு மேற்பட்டவர்களையும் கொஞ்சம் அதிகமாகவே  பாதிக்குது.  பொதுவா எல்லா வைரல் இன்ஃபெக்‌ஷன்லயும் சளி, இருமல், காய்ச்சல், உடம்பு வலின்னு ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் இருக்கும். ஆனா, இப்போ இருக்கிற வைரல் இன்ஃபெக்‌ஷன்ல சில பேருக்கு இருமல் மட்டும் ரொம்ப நாள் தொடருது. அதாவது, குறைஞ்சது ரெண்டு வாரத்துல இருந்து நாலு வாரம் வரைக்கும்கூட இந்த இருமல் தொடருது. 

தற்சமயம், சென்னையில பரவிட்டிருக்க இந்த வைரல் இன்ஃபெக்‌ஷன்னால பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை என்றாலும், சில பேருக்கு தொடர் இருமல், இன்னும் சிலருக்கு லேசா மூச்சு வாங்குற பிரச்னை ஏற்படுது. 

சரி, இந்தத் தொற்றுகளுக்கு என்ன சிகிச்சை அப்படின்னு பார்த்தீங்கன்னா, அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டும் தான் தேவைப்படுது. அதாவது,  காய்ச்சல், சளி, இருமல், உடல் வலின்னு என்னென்ன அறிகுறிகள் காணப்படுதோ, அவற்றுக்கான சிகிச்சைகளைத்தான் கொடுத்துட்டிருக்கோம். அதுவே போதுமானது. 

பொதுநல மருத்துவர் ராஜேஷ்

இந்த வைரல் இன்ஃபெக்‌ஷன் ஒருத்தர்கிட்ட இருந்து ஒருத்தருக்கு பரவுகிறதான்னு கேட்டீங்கன்னா, ஆமா பரவிக்கிட்டு தான் இருக்கு. பாதிக்கப்பட்டவங்க இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படற நீர்த் துளிகள் மூலமா இந்த வைரல் இன்ஃபெக்‌ஷன் பரவிக்கிட்டுதான் இருக்கு. அதனால, மாஸ்க் யூஸ் பண்றது மட்டும் தான், இந்த வைரல் இன்ஃபெக்‌ஷன் பரவாமல் இருப்பதற்கான சரியான வழி. பொதுவா சுவாசம் வழியா பரவக்கூடிய எல்லா தொற்றுகளையும் தடுக்கிறதுக்கு சரியான வழி மாஸ்க் மட்டும்தான். இந்தக் கட்டுரையைப் படிச்ச அடுத்த நிமிஷத்துல இருந்து தயவு செய்து மாஸ்க் யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுங்க. அதுதான் உங்களுக்கும், உங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும் பாதுகாப்பு. நீரிழிவு, ரத்த அழுத்தம் மாதிரி பிரச்னைகள் இருக்கிறவங்க கவனமா இருக்கணும்.

கூடவே, நிறைய காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள்னு பேலன்ஸ் டயட் சாப்பிட்டு வந்தீங்கன்னா, இந்த மாதிரி வைரல் இன்ஃபெக் ஷன்ஸ் ஏற்படாம உங்களை பாதுகாத்துக்க முடியும்” என்கிறார் டாக்டர் ராஜேஷ்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41