MUDA case: `ஆளுநரின் உத்தரவில் தவறு இல்லை’ – சித்தராமையா மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முதல்வர் மீது விசாரணை நடத்துமாறும் முன்பு ஆளுநரிடம் சிலர் புகாரளித்தனர். அந்தப் புகாரை ஏற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடுத்து விசாரிக்க கடந்த மாதம் அனுமதித்தார்.

சித்தராமையா

இதனால், ஆளுநரின் உத்தரவுக்கு எதிராகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா, பிரிவு 163-ன் படி அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு சட்டப்படி ஆளுநர் முடிவெடுக்கவில்லை. அவரின் உத்தரவை ரத்து செய்யுங்கள்’ என்று கோரி மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஆளுநருக்கெதிரான சித்தராமையாவின் மனுவை ரத்து உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது.

சித்தராமையாவின் மனுவை இன்று விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, “சாதாரண சூழ்நிலையில் அரசியலமைப்பின் 163-வது பிரிவின்படி அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். இருப்பினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது ஆளுநர் தாமாக முடிவெடுக்கலாம். இந்த வழக்கும் அத்தகைய விதிவிலக்கான சூழல்தான். இதில், ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுத்ததில் எந்த தவறும் இல்லை. மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகள்மீது சந்தேகத்திற்கிடமின்றி விசாரணை தேவைப்படும்” என்று கூறி சித்தராமையா மனுவைத் தள்ளுபடி செய்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து, சித்தராமையா தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய, இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவின்மீது தடைவிதிக்குமாறு சித்தராமையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், தன்னுடைய உத்தரவு தானே நிறுத்த முடியாது என நீதிபதி எம்.நாகபிரசன்னா உறுதியாகக் கூறிவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb