சிபிஎம் மூத்த தலைவா் உடலை தானம் செய்ய மகள் எதிர்ப்பு… நல்லடக்கம் செய்யக் கோரி கோர்ட்டில் வழக்கு!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழமையான கம்யூனிஸ்ட்வாதிகளில் ஒருவர் எம்.எம்.லாரன்ஸ் (95). 1929-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி எர்ணாகுளம் முழவுகாடு பகுதியைச் சேர்ந்த மேத்யூ- மரியம் தம்பதியினரின் மகனாக பிறந்தார். 1946-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை கிடைத்ததும் பத்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர கட்சி பணிக்காக இறங்கினார். தனது 21-வது வயதில் இடப்பள்ளி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறைந்த சி.பி.எம் நிர்வாகி எம்.எம்.லாரன்ஸ்

75 ஆண்டுகாலம் நீண்ட பொது வாழ்க்கையில் சுமார் 6 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார் எம்.எம்.லாரன்ஸ். 1980 முதல் 1984-ம் ஆண்டு வரை இடுக்கி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர், சி.ஐ.டி.யு தேசிய செயலாளர், தேசிய துணை தலைவர் மற்றும் கேரள மாநிலத்திலும் சி.பி.எம் கட்சி பதவிகளை வகித்துவந்தார். சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் ஒருங்கிணைப்பாளராக இருந்துவந்தார்.

2013-ம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த சி.பி.எம் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மத்திய குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஏரியா குழு உறுப்பினராக பதவி இறக்கம் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து பணி செய்தார். விடா முயற்சியால் மீண்டும் மாநில குழு உறுப்பினராக பதவி உயர்வு பெற்றார். வயது காரணமாக அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும் மாநில குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வந்தார்.

தந்தை உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஒப்படைக்க மகள் எதிர்ப்பு

நீண்ட நாள்களாக உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவந்தார் எம்.எம்.லாரன்ஸ். கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். எம்.எம்.லாரன்ஸின் மனைவி பேபி ஏற்கெனவே காலமாகிவிட்டார். எம்.எம்.லாரன்ஸ்-க்கு எம்.எல்.சஜீவ், அபி ஆபிரகாம், மகள்கள் சுஜாதா, ஆஷா லாரன்ஸ் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான எம்.எம்.லாரன்ஸின் உடல் எர்ணாகுளம் டவுண் ஹாலில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக அவரது உடலை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், தந்தை தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஒப்படைக்கும்படி கூறியிருந்ததாக எம்.எம்.லாரன்ஸின் மகன் எம்.எல்.சஜீவன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே எம்.எம்.லாரன்ஸின் உடலை மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்கக்கூடாது என்றும், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் எனவும் அவரது மகள் ஆஷா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

எர்ணாகுளத்தில் நடந்த தள்ளுமுள்ளு

இந்தநிலையில் இன்று (செப்.23) எர்ணாகுளம் மருத்துவக்கல்லூரிக்கு எம்.எம்.லாரன்ஸின் உடலை எடுத்துச் செல்ல முயன்றபோது மகள் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பெண் தொண்டர்கள் கோஷம் போட்டனர். மேலும் பெண் தொண்டர்களுக்கும் லாரன்ஸின் மகள் ஆஷாவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தந்தையின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அவர் தனது உடலை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கும்படி கூறவில்லை எனவும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் ஆஷா லாரன்ஸ். இதையடுத்து ஆஷாவின் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கும் வரை லாரன்ஸின் உடலை பிணவறையில் பாதுகாப்பாக வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூத்த கம்யூனிஸ்ட் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் விவாதம் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.