திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக வெளியான ஆய்வின் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி கோயிலுக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து வருகிறது. ஒன்றிய அரசு இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்கிடையில் இவ்விவகாரம் ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகரும், தற்போதைய ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், “இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இது போன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட கலங்கத்தைப் பரிசுத்தம் செய்யப் பூஜைகளையும் நடத்தியிருந்தார். இப்படியாகத் திருப்பதி லட்டு விவகாரத்தில் முழு வீச்சுடன் இறங்கி கருத்துகளைத் தெரிவித்து, பல நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் பவன் கல்யாண்.
இந்நிலையில் ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது. அதில், தொகுப்பாளர் ஒருவர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா…” என்று ஜாலியாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “இந்த நேரத்தில் லட்டு பற்றிப் பேச வேண்டாம். இது சென்ஸிட்டீவான விஷயம்” என்று பதிலளித்திருந்தார். லட்டு குறித்து ஜாலியாக நடந்த இந்த உரையாடல் குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
திருப்பதி லட்டு விவகாரத்தை நடிகர் கார்த்தி கிண்டலாகப் பேசியிருப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கார்த்தியின் விளையாட்டான பேச்சு சமூகவலைத்தளங்களில் விவகாரமாக மாற்றப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் பவன் கல்யாண், “நேற்று நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் லட்டைப் பற்றி கிண்டலாகப் பேசியிருப்பதைப் பார்த்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. திருப்பதி லட்டு விவகாரத்தை காமெடி ஆக்க வேண்டாம். ஒரு நடிகராக உங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம் நடிகர்கள் இந்து சனாதன தர்மத்தை மதிக்க வேண்டும்” என்று ஆவேசத்துடத்துடன் பேசியிருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி, “பவன் கல்யாண் சார், உங்கள் மீது எனக்குப் பெரிய மரியாதை இருக்கிறது. நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பதி வெங்கடேஷ்வரரின் பக்தன் நான். நமது கலாச்சாரத்தை என்றும் மதிக்கக்கூடியவன் நான்.” என்று பதிவிட்டிருக்கிறார்.