“2026 தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 26 சீட் கிடைக்குமா? என்பதே சந்தேகம்” – புகழேந்தி பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி 2026 தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 26 சீட் கிடைக்குமா? என்பதே சந்தேகம்தான் என்று பேசியிருக்கிறார்.

அ.தி.மு.கவை ஒருங்கிணைப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, வா.புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கி இருந்தனர். தொடர்ந்து அதிமுக ஒன்றிணைவது தொடர்பாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய புகழேந்தி, “அ.தி.மு.கவில் ஒற்றுமை ஏற்படுகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் எல்லோரும் பிரிந்து இருப்பதால் 2026 தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட் கிடைக்குமா? என்பதே எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. அனைவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று சசிகலா ஏமாற்றி வருகிறார்.

புகழேந்தி

ஓபிஎஸ் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். எல்லோரும் சேர்ந்து பேசும்போது எடப்பாடியே தலைவராக இருக்கட்டும் என்று சொல்லக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே அதிமுக வாக்கு வங்கிகளை இழந்திருக்கிறோம். இதில் விஜய் வந்தால் அவர் 10 – 15 சதவிகித வாக்கு வங்கிகளை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு தலைவராக உருவெடுத்து வருவதற்கு முயற்சி செய்து வருகிறார். அப்போது அ.தி.மு.க வின் வாக்கு வங்கி தானாகவே சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பி.ஜே.பி யை முன்னிலைபடுத்தினால் எந்தக் காலமும் எந்தக் கட்சியும் வெற்றி பெறுவது கடினம்” என்று பேசியிருக்கிறார்.