“மகளிர் உரிமைத் தொகை குடும்ப உறுப்பினர் மூலம் மதுக்கடைக்கே செல்கிறது” – விசிக ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

“படிப்படியாக கடைகளை குறையுங்கள் எனச் சொல்லிவந்த நிலையில் இப்போது மது விற்பனை இலக்கை குறையுங்கள் என்கிறீர்களே!”

“படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதில் எந்த பலனுமில்லை. 2022-ம் தேதி இதே அரசு 500 கடைகளை மூடியது, அதேபோல முந்தைய அ.தி.மு.க அரசும் 500 கடைகளை மூடியது. இவற்றால் ஏற்பட்ட பயன் என்ன? கடைகளை மூடியதால் மது வருவாய் குறைந்திருக்கிறதா? தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன் 35,000 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் இன்று 45,000 கோடியை தொட்டிருக்கிறதே. ஆகவே சொல்கிறோம். மது விற்பனைக்கான இலக்கை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும்”

திருமாவளவன் எம்.பி

“மதுவினால் வரும் நிதிக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் மதுவிலக்கு அமல்படுத்துவது சரியாக இருக்குமா?”

`தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பல ஆண்டுகளாகவே மதுவிலக்கு குறித்து பேசிவருகிறபோதும் மாற்று பொருளாதார கொள்கை குறித்து சிந்திக்காதது ஏன்… சரி வருவாய் குறித்து அரசு கவலை கொண்டால் மது வருவாயைவிட்டுவிட்டு மணல் மற்றும் கனிமவள விற்பனையை அரசு கையிடுத்தால் லாபமும் கிடைப்பதோடு மணல் கொள்ளையையும் தவிர்க்கலாமே.

அதுவும் இல்லையென்றால் ஏற்கனவே 8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கும் நிலையில் கூடுதலாக 30 ஆயிரம் கோடி கடன் வாங்க முடியாதா?”

விசிக – திமுக – திருமாவளவன் – ஸ்டாலின்

`மதுவிலக்கு குறித்து பேசும் வி.சி.க.. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை சம்பந்தமில்லாமல் விமர்சிப்பது ஏன்?”

“ஒருபக்கம் மக்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிடும் தமிழ்நாடு அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மதுக்கடையை மறுபக்கம் திறந்து வைப்பது நலத்திட்டத்தின் நோக்கத்தையே சீரழிக்கும் என்கிறோம். மகளிர் உரிமைத் தொகையே இதர குடும்ப உறுப்பினரின் மூலம் டாஸ்மாக்குக்கே திரும்புவதாக நாங்கள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. ”

ஆதவ் அர்ஜுனா

“`தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கும் தி.மு.க-விடம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறீர்களே, அது எப்படி சாத்தியம்?”

“தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆந்திராவில் துணை முதலமைச்சர் பதவியை கூட்டணிக் கட்சித் தலைவரான பவன் கல்யாணுக்கு சந்திரபாபு வழங்கியதுதான் அரசியல் முதிர்ச்சி.. அதுவே உண்மையான ஜனநாயகம். வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் பங்கு கூட்டணிகளுக்கு இருப்பதனால்தான் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. என்னை பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.”