அரசியல் களத்துக்கு வரும்போது, “தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” என்றார் கமல்ஹாசன். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடனேயே அவர் கூட்டணியாகக் கைகோத்தது அரசியல் அரங்கில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. ‘திரைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர், அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்’ என அவருக்குப் பின்னால் அணிவகுத்த இரண்டாம்கட்டத் தலைவர்களும்கூட, ‘கமல்ஹாசன் பார்ட் டைம் அரசியல் செய்கிறார்’ எனச் சொல்லி கட்சியிலிருந்து கழன்றுகொண்டனர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் 21-09-2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மைக் பிடித்த கமல்ஹாசன், ‘‘கட்சி ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. ‘பூத் கமிட்டிக்கு குறைந்தபட்சம் 5 பேரையாவது நியமிக்க வேண்டும்’ எனக் கெஞ்சும் நிலைக்கு என்னை விட்டுவிட்டீர்களே… நான் தோற்றுப்போன அரசியல்வாதி” என வெளிப்படையாக அவர் பேசியது தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது பேச்சின்போது, “ ‘நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள். அது சரியாக வராது’ என்றார்கள். அதற்கு, ‘நான் என்ன வேட்டைக்கா செல்கிறேன்’ எனக் கேட்டேன். ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம்’ என்றார்கள். அதற்கு, ‘மேடை, வெளிச்சத்தை நான் நான்கு வயதிலிருந்தே நேரடியாகப் பார்த்து வருகிறேன்’ எனப் பதிலளித்தேன். ‘என்ன திரும்பவும் திரைத்துறைக்குப் போய்விட்டார்…?’ என்றார்கள். பின்ன என்ன நான் கோட்டைக்குச் சென்று கஜானாவா திறக்க முடியும்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால், அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் சினிமா எடுக்கச் செல்கிறேன்.
‘முழுநேர அரசியல்வாதியாக மாறுங்கள்’ என்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை எனப் பெரியார் சொல்வதுதான் சரி. எனவே, முழுநேர அரசியல்வாதியாகி குடும்பத்தை விட்டுவிட்டு என்னிடம் வாருங்கள் என நான் சொல்லவில்லை. முழு நேர அரசியல்வாதியாக மாறி, உங்கள் குடும்பங்களைத் தெருவில் விட்டுவிட வேண்டாம்.” என மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். எந்தவித ஒளிவு மறைவற்ற இந்தப் பேச்சு, தமிழக அரசியல் அரங்கிலும் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பிவருகிறது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டபோது, “கமல்ஹாசன், பார்ட்டைம் அரசியல்வாதிதான். எனவே தொண்டர்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறார். பகுதி நேர அரசியலில் அவர் ஈடுபடுவது பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அரசியலில் தொடர்ச்சி, வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், தொண்டர்களிடத்திலும் ‘நீங்கள் வருத்திக்கொள்ளாதீர்கள்; குடும்பத்தோடு இருங்கள்’ என்கிறார் கமல்ஹாசன். அது தவறு இல்லைதான். ஆனால், அவ்வப்போது அரசியல் செய்வதற்குக் காலச்சூழல் இடம் கொடுக்காது. பார்ட் டைம் அரசியல் தவறான அணுகுமுறை. அது கட்சியை வளர்க்க உதவாது. அவரை நம்பிவரும் நபர்களுக்குக் கமல் கூறுவது நல்ல அறிவுரை இல்லை.
கட்சி ஆரம்பிக்கும்போது கமல் பின்னால் இருந்த ஐ.ஏ.எஸ்,, அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் என எல்லோரும் வெளியில் சென்று விட்டனர். இதற்குக் காரணம்… கமலின் பார்ட் டைம் அரசியல்தான். இரண்டு மாதம் லீவு எடுத்துவிட்டு வருவேன்.
இடையில் அறிக்கை மட்டும் கொடுப்பேன் என்பதெல்லாம் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாதது. தன்னை தோற்றுப்போன அரசியல்வாதி என்று அவர் சொல்லிக்கொள்வதை எல்லாம் ‘சமாளிக்கிறார்’ என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நல்ல அரசியல்வாதிக்கான நெறிமுறை இல்லை. இதேநிலை நீடித்தால், கட்சி மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். இரட்டை குதிரை சவாரி சரியாக இருக்காது. தி.மு.க., புண்ணியத்தில் மாநிலங்களவை எம்.பி-யாகப் போகிறார். அங்கு போய் தமிழக மக்களுக்காக என்ன பேசப்போகிறார் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் பரிதாபமாக இருக்கிறது” என்றார்.
ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனின் பேச்சு குறித்தான அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு ம.நீ.ம., செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் பேசியபோது, “தோற்றுப்போன அரசியல்வாதி எனத் தலைவர் வருத்தமாகச் சொல்லவில்லை. ‘நாம் வெற்றிபெறவில்லை. எனவே வெற்றிபெறும் வரை போராட வேண்டும்’ என்றுதான் சொல்கிறார். திரையுலகில் பல தோல்விகளையும் பார்த்தவர் அவர். ஆனாலும் ‘சாதனையாளர்’ என்கிற பெயர்தான் மிச்சம் இருக்கிறது. அதுபோல அரசியலிலும் மிகப்பெரிய சாதனைகளை அவர் நிகழ்த்துவார். அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே, ‘குடும்பத்தைப் பாருங்கள்’ என்றுதான் தொண்டர்களிடம் சொல்லிவருகிறார். மாணவர்களைக்கூட அரசியலுக்கு அழைப்பார். ஆனால், ‘படிக்கும் வேலையைச் சரியாகப் பார்க்க வேண்டும்’ என்றும் கண்டிப்பு காட்டுவார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது ‘அரசியலைச் சேவையாகச் செய்யுங்கள்’ என்பதுதான்” என்று புதுவிளக்கம் கொடுத்தார்.