Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன?

லெபனானில் (Lebanon) செப்டம்பர் 17-ம் தேதி ஆயிரக்கணக்கில் பேஜர் (pager) வெடித்ததில், 12 பேர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சம்பவம் ஹிஸ்புல்லா (Hezbollah) இயக்கத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் மொசாட் (Mossad) உளவு அமைப்பால் நடத்தப்பட்டதாகப் பேச்சுகள் நடத்தப்பட்டன. ஆனால், இஸ்ரேலோ (Israel) வாய்திறக்காமல் இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறின. இதிலும் பலர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

லெபனான் – பேஜர் வெடிப்பு சம்பவம்

இவ்வாறிருக்க, பேஜர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையில், வெடித்துச் சிதறிய பேஜர்கள் தைவான் நாட்டின் கோல்ட் அப்பல்லோ (Gold Apollo) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. ஆனால், பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென தைவான் நிறுவனம் மறுத்துவிட்டது. இதற்கிடையில், பல்கேரியாவில் கேரளாவைச் சேர்ந்த 37 வயது ரின்சன் ஜோஸ் (Rinson Jose) என்பவருக்குச் சொந்தமான நோர்டா குளோபல் லிமிடெட் (Norta Global Ltd) நிறுவனம் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு பேஜர்களை விநியோகம் செய்ததாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து வியாழனன்று, பல்கேரிய மாநில பாதுகாப்பு நிறுவனமான DANS, நாட்டின் உள்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அந்த நிறுவனம் தொடர்பாக விசாரித்து வருவதாகத் தெரிவித்தது.

இத்தகைய சூழலில், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இறக்குமதியோ, ஏற்றுமதியோ அல்லது உற்பத்தியோ செய்யப்படவில்லை என DANS வெள்ளிக் கிழமை தெரிவித்தது. அதோடு, நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் அதன் உரிமையாளரும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் DANS தெளிவுபடுத்தியது. மேலும், ரின்சன் ஜோஸ் குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் அவரின் உறவினர் ஒருவர், “நாங்கள் தினமும் தொலைபேசியில் அவரிடம் பேசுவோம். இருப்பினும், கடந்த மூன்று நாள்களாக ஜோஸுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரின் மனைவியையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ரின்சன் ஜோஸ் (Rinson Jose)

அவர் எதையும் நேராகப் பேசக்கூடியவர். அவரை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். எந்தத் தவறான செயலிலும் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த சம்பவத்தில் அவர் சிக்கவைக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

ரின்சன் ஜோஸ் குறித்து வெளியான தகவலின்படி, தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு நார்வேக்கு (Norway) சென்றதாகவும், அங்கு செல்வதற்கு லண்டனில் சிறிது காலம் வேலைபார்த்ததாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், அவரைத் தொடர்புகொள்ள முடியாததாலும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாததாலும் அவரே நேரில் விசாரணைக்கு வந்த பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.