Srilanka: இலங்கை அதிபரான அநுர குமார; சீனா பக்கம் சாய்வாரா… இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

முதன்முறையாக 38 பேர் களம் கண்ட இலங்கை அதிபர் தேர்தலில், முக்கியத் தலைவர்களைத் தாண்டி முந்தி அடித்துக் கொண்டு மேலே வந்திருக்கிறார் அநுர குமார திசாநாயக்க. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவையும் ஓரங்கட்டி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார வெற்றிபெற்று அதிபராகியிருக்கிறார். இதையடுத்து, `சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அநுர, இந்தியாவுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுப்பாரா?’ என்ற விவாதம்தான் இந்தியா முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதிபரான அநுர!

1968-ம் ஆண்டு இலங்கையின் அநுராதபுரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் அநுர குமார. கூலித் தொழிலாளியின் மகன். படிப்பில் கெட்டிக்காரர். இளமைக்காலத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டவர், கல்லூரிக் காலத்திலேயே தன்னை அரசியல் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். இலங்கை கம்யூனிசக் கட்சியிலிருந்து உடைந்து தனிக் கட்சியாக உருவான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) கட்சியில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தவர், இன்று இலங்கையின் ஜனாதிபதியாக மாறியிருக்கிறார்.

Anura

இலங்கையின் அதிபராக இருந்த ரணில், ஐ.எம்.எஃப்-ன் கடனுதவியைப் பெற மக்களுக்கு வரி மேல் வரி போட்டு அதிருப்தியைச் சேர்த்துக்கொண்டார். ஊழல் செய்து நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சே குடும்பத்துக்கு பாதுகாப்பளித்தார். மேலும், ராஜபக்சே ஆதரவு எம்.பி-க்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இது அனைத்தும் ஒன்று சேர்ந்து, ரணிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் கட்சிகள் மத்தியில் நெருக்கம் காட்டியதே, சிங்கள மக்கள் மத்தியில் அவருக்குச் சறுக்கலை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை மக்களும் பழக்கப்பட்ட அரசியல் தலைவர்களை ஒதுக்கிவிட்டு, புதியவருக்கு வாய்ப்புக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். எதிர்க்கட்சிகளின் சறுக்கல்களையெல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்களின் எண்ணவோட்டத்தைக் கணித்து பிரசாரம் செய்த அநுரவுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது.

இந்தியாவுக்குப் பிரச்னையா?

`அநுர அதிபரான பிறகு இந்தியாவுடனான உறவு எப்படியிருக்கும்?’ என்பது குறித்துப் பேசும் இலங்கை அரசியல் நோக்கர்கள், “மார்க்சிஸ்ட் போர்வையிலுள்ள ஜே.வி.பி கட்சி, அடிப்படையில் இனவெறி கொண்ட கட்சிதான். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு வடக்கு கிழக்கு என்று மாகாணங்களைப் பிரித்தது, தமிழர்களுக்கான சுனாமி நிவாரணக் கட்டமைப்பைக் கலைத்தது என ஆரம்பம் முதலே தமிழ் மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தது ஜே.வி.பி. அநுரவும் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாகப் பேசியவர்தான். ஜே.வி.பி என்ற பெயருக்குப் பின்னால், பல்வேறு கசப்பான சம்பவங்களும், களங்கங்களும் இருக்கின்றன. எனவேதான், இந்தத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, `தேசிய மக்கள் சக்தி’ கூட்டணி என்ற பெயரில் களமிறங்கினார் அநுர.

JVP

இடதுசாரி சார்பு கொண்ட விஷயங்களைப் பேசுவதால், சீனாவின் ஆதரவு எப்போதுமே ஜே.வி.பி-க்கு உண்டு. இந்தத் தேர்தல் பிரசாரங்களில்கூட சீனாவின் நிதியுதவிகள் அநுரவுக்குக் கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக முழுக்க முழுக்க சீனாவின் பக்கம் இனி இலங்கை சாய்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு அதிக கடனுதவி வழங்கியிருப்பது இந்தியாதான். குறிப்பாக, கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, உடனடியாக கடன் கொடுத்து உதவியது இந்தியாதான். இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் இந்தியாவின் பங்கு அதிகம். பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக இலங்கை இன்னும் மீளவில்லை என்பதால், இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் அநுர எடுக்கமாட்டார்” என்றவர்கள், தொடர்ந்து இந்திய தொழிலதிபர்களின் முதலீடு குறித்தும் பேசினர்.

தப்புமா அதானியின் முதலீடுகள்?

“தேர்தல் பிரசாரத்தில், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சூழலியல் பாதிப்பையும், பொருளாதாரரீதியான பிரச்னைகளையும் இலங்கைக்கு ஏற்படுத்தியிருக்கும் `அதானி எனர்ஜி’ நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம்’ என முழங்கினார் அநுர. ஆனால், அதெல்லாம் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் போலி வாக்குறுதிதான். இதற்கு முன்பு பல தலைவர்களும், இதே போல முழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அமைதியாகியிருக்கிறார்கள். அதனால், அதானி உள்ளிட்ட இந்தியத் தொழிலதிபர்களின் முதலீடுகளிலும் தற்போது அநுர கை வைக்கமாட்டார்.

அதே போல, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மிக மிக அருகிலுள்ள இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் பிரச்னை, இனப்படுகொலை, தமிழ் மீனவர்கள் பிரச்னை என அனைத்திலும் கடந்த காலங்களில் நடந்தது அப்படியே தொடரும். இந்தப் பிரச்னைகளுக்கு எந்த முடிவும் எட்டப்படாது. இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளவே அநுர முயல்வார். ஆனால், முன்பைவிட இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகமாகக் காணப்படும். அதுவே இந்தியாவுக்கு பிரச்னையாக அமையும்” என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.

அநுர குமார – ஜெய்சங்கர்

அநுர குமார திசாநாயக்கவின் எழுச்சியை சில மாதங்களுக்கு முன்பாகவே கணித்துவிட்டது இந்தியா. அதனால்தான், அவரை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல அதிகாரிகளும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அரசின் ராஜாங்க ரீதியான இந்த நகர்வு, வரும் காலங்களில் இந்தியாவுக்கு எப்படி உதவும் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்!