அரவிந்த் கெஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு நேற்று முதல்வராக உறுதிமொழியேற்றார் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி. இன்று (திங்கள் கிழமை) முதல்வர் அலுவலகத்தில் இரண்டு நாற்காலிகள் போட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
“நான் இன்று டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்த நாற்காலி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கானது. பரதன் ஜி தனது இதயத்தில் உணர்ந்த வலியை நான் இன்று உணர்கிறேன். அவர் ஶ்ரீ ராமரின் காலணிகளை அருகில் வைத்து ஆட்சி செய்ததைப் போல, அடுத்த நான்கு மாதங்கள் நான் டெல்லி முதல்வராக பணியாற்றுவேன்” என உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார் அதிஷி.
“வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாக்களித்து அவரை முதல்வராக அமரவைப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அவருடைய நாற்காலி இங்கேயே இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜைக் கெடுக்கும் வகையில் பல கற்களை எறிந்தது பாஜக. அவரை 6 மாதம் சிறையில் கூட அடைத்தது. நீதிமன்றமே ஏஜென்சி தவறான நோக்கத்துடன் அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தது.” என்று பேசினார்.
சுஷ்மா சுவராஜ் மற்றும் ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து 43 வயதான அதிஷி டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், ஜாமின் கிடைத்த பிறகு, கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்து வென்ற பின்னரே முதல்வராகப் பதவியேற்பேன் என சூளுரைத்துள்ளார்.
அதனால் பிப்ரவரி மாதம் தேர்தல் வரும் வரை இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் அதிஷி.