திருநெல்வேலி: “பூணூல் அறுப்பு சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” – எல்.முருகன் கண்டனம்

திருநெல்வேலி, டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் பூணூல் அணியக்கூடாது என்று மிரட்டி பூணூலை அறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு – இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? கள்ள மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரைச் சார்ந்த சிறுவனைத் தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, ‘இனி பூணூல் அணியக்கூடாது’ என்று மிரட்டியும் சென்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு உடனடியாக அவரது இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினேன்.

எல்.முருகன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மதத்தவரின் புனித பொருட்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவது, கேலி செய்வது ஆகியவை பெரும் குற்றமாகும். ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக சிறு மக்கள் விரோதகும்பல் தொடர்ச்சியாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாகக் கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்தச் செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து அந்த திரைமறைவு கருப்பு நபர்களையும் சட்டத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும்.” என கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.