அஷ்வினை அவரின் மனைவி ப்ரீத்தியே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அணியின் இந்த வெற்றிக்கு அஷ்வின் முக்கிய பங்காற்றியிருந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியவர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விகெட்டுகளை வீழ்த்தினார். தனது சொந்த மண்ணில் அஷ்வின் சிறப்பாக விளையாடியதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஷ்வினை அவரின் மனைவி ப்ரீத்தியே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்திருக்கிறார். பிசிசிஐ பகிர்ந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஷ்வினின் மனைவி நம் குழந்தைகளுக்கு மகள்கள் தினத்தில் (Daughter’s day) என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த அஷ்வின் “நான் ஐந்து விக்கெட்டை வீழ்த்திய பந்தை அவர்களுக்குப் பரிசாக அளிப்பேன்” என்று கூறியிருக்கிறார். பிறகு அவரது சதம் குறித்து கேட்டதற்கு, “நான் சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை.
விளையாடிய முதல் ஆட்டத்திலேயே இவை நிகழ்ந்தது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த மைதானம் ஒரு எனர்ஜியை கொடுத்து என்னை ஊக்குவித்துக் கொண்டேதான் இருக்கிறது. நான் விளையாடும்போது மைதானத்தில் இருந்து குடும்பத்தினரைப் பார்ப்பது கடினம்தான். விளையாட்டின் நடுவில், ‘நாங்கள் ஹாய் சொல்லும்போது நீங்கள் ஏன் ஹாய் சொல்ல மாட்டிங்கிறீர்கள்’ என்று குழந்தைகள் எப்பொழுதும் என்னிடம் சண்டை போடுவார்கள்.
ஆனால் சில சூழ்நிலைகளால் ஹாய் சொல்ல முடியாது. இனிமேல் முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி மைத்தானத்திற்கு வந்து என்னை ஊக்கப்படுத்தியத்திற்கு ” என்று மனைவிக்கும்,குழந்தைகளைக்கும் நெகிழ்ச்சியாகத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். அஷ்வின் மனைவி ப்ரீத்தியும் தன்னுடைய வாழ்த்தை அஷ்வினுக்குத் தெரிவித்திருக்கிறார்.