`அமைச்சராக இருந்தபோது ரூ.27.90 கோடி லஞ்சம்?’-வைத்திலிங்கம், அவர் மகன் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் தற்போது ஓ.பன்ன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க இணைப்பு குறித்து பேசிவந்த வைத்திலிங்கம், 2025 பிப்ரவரி மாதத்திற்குள் அனைவரும் இணைந்து விடுவோம் எனக் கூறினார். அவரின் இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் சரவணன், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட லஞ்சம் பெற்றுள்ளதாக வைத்திலிங்கம், பிரபு ஆகியோர் மீது கடந்த 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

வைத்திலிங்கம்

இது குறித்து விவரமறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். “ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, தனது நண்பர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து, ஒரு நிறுனத்தை நடத்தி வந்தார். அதன் இயக்குநராக பிரபு இருக்கிறார்.

இந்நிலையில் அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில், வைத்திலிங்கம் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி கட்டட அனுமதி கொடுப்பதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக ஏற்கெனவே புகார் அளித்தனர். அதன் பேரில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சரவணன் இது குறித்து வழக்குப் பதிவு செய்தார். இதன் அடிப்படையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்த கடந்த 2011-ம் ஆண்டு மே.16 முதல் 2016-ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். இதில், வைத்திலிங்கம் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர் பெயரிலும் என மொத்தமாக 2011-ம் ஆண்டு மே.16-ம் தேதிக்கு முன்பாக, 36.58 லட்சம் ரூபாய் இருப்பு வைத்து உள்ளார்.

விஜிலென்ஸ்

இந்நிலையில், சென்னை பெருங்களத்துாரில் ஒரு நிறுவனம் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு திடீரென இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதியை வழங்குவதற்கு, அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சப் பணமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து உறுதிசெய்த நிலையில், வைத்திலிங்கம், அவரின் மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றனர்.