விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இன்று விருதுநகர் வந்திருந்தார். கட்சிக்கொடியற்று விழா, கருத்தரங்கக் கூட்டம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் பேரவையின் 5-வது மாநில கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன் எம்.பி., சாலை பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை ஆதரித்துப் பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நெடுஞ்சாலைத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களைப் பணியமர்த்துதல் முறையினை தமிழக அரசு கைவிட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இருக்கின்ற பணியாளர்களுக்கும், பணி நிறைவு பெற்றவர்களுக்கும் பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். அக்டோபர் 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் படி 1954ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய மது ஒழிப்பு கமிட்டியினர், மது ஒழிப்பு தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
அந்தவகையில் தேசிய மது ஒழிப்பு கொள்கை குறித்து மத்திய அரசுக்கு மாநாட்டின் மூலம் வலியுறுத்த உள்ளோம். தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி வி.சி.க. மகளிர் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க. ஆளுகிற உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது ஒழிப்பு அமலில் இல்லை. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதற்குக் காரணம் தேசப்பிதா காந்திஜியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகாரில் மது ஒழிப்பு அமலில் இருப்பதற்குக் காரணம் பா.ஜ.க அல்ல. அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கில் உறுதியாக இருப்பதுதான். இதைத் தவிர்த்து பா.ஜ.க. ஆளுகிற மற்ற எந்த மாநிலங்களிலும் மதுவிலக்கு அமலில் இல்லை. அந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவது பா.ஜ.க.வின் மொழியில் சொல்லப்போனால் பெரும்பான்மையான இந்துக்கள்தான்.
இந்து சமூகத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் பா.ஜ.க., இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக மாநில அரசின் மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டு வெறுமனே கண்டும் காணாமல் இருப்பது மக்கள் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணியிலிருந்தாலும் கூட ஆளும்கட்சிக்கு நெருடலை ஏற்படுத்துகிற வகையில் முக்கியமான பிரச்னையை கையிலெடுத்திருக்கிறோம். இதை வரவேற்றுப் பாராட்டவிட்டாலும் இந்த முயற்சியைக் கேலி செய்யாமல் இருக்கலாம். ஆனால் பா.ஜ.க. கேலி செய்வதென்பது மக்கள் நலனுக்கான அக்கறை அல்ல. அது தி.மு.க. கூட்டணியைப் பழகீனப்படுத்துவதாகத்தான் தெரிகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கடந்த 10 ஆண்டுகளில் ஆளும் பா.ஜ.க அரசு எந்த முயற்சியும் எடுத்து வைக்கவில்லை.
இந்தநிலையில் மூன்றாவது முறையாக 5 ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்துள்ள பா.ஜ.க அரசு, இலங்கை- தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இதுவரை ஒரு அங்குலம் கூட தீர்வுக்காக நகரவில்லை. முன்பு எப்படி இருந்ததோ அதே போன்றதொரு நிலைதான் தற்போதும் தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்து-பௌத்தவ பேரினவாதத்தில் அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்பும்தான் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் திட்டமிடப்பட்டுப் பல போதைப்பொருள் புழக்கங்கள் தமிழகத்தில் பரப்பப் படுகின்றன. இதைத் தடுக்க முடியாத அரசு நாங்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு, மீனவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறுவது நாடகம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எதிர்த்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற ரீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவந்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சி கொண்டுவரப்பார்க்கிறது. குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டு வரும் முயற்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள். ஒரு கட்சி, ஒரு ஆட்சி என்பது பா.ஜ.க., செயல் திட்டங்களில் ஒன்று அதை அனுமதிக்க முடியாது” என்றார்.